முன்னாள் தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் உசேனுக்குக் கொடுக்கப்பட்டு வந்த ஆயுதப் படை வீரர்களின் பாதுகாப்புச் சேவை 14அவது பொதுத் தேர்தலுக்குப் பின் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்.
மே 9 தேர்தலுடன் அச்சேவையை நிறுத்தியாயிற்றே என்று ஆயுதப்படை அறிக்கை ஒன்று கூறுகிறது.
நேற்று மலேசியாகினி, ஆயுதப் படையின் சிறப்புப் பிரிவைச் சேர்ந்த படைவீரர் மூவர், ஹிஷாமுடினுக்கு மெய்க்காவலர்களாக தொடர்ந்து பணியாற்றி வருவதாக வெளியிட்டிருந்த செய்தியை அடுத்து இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.
ஹிஷாமுடினின் மெய்க்காவலர்களாக உள்ள மூவரில் இருவர் கடல்படை சிறப்பு நடவடிக்கைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும் மூன்றாமவர் மின்னல் படைப்பிரிவைச் சேர்ந்தவர் என்றும் சில வட்டாரங்கள் மலேசியாகினியிடம் தெரிவித்தன.
இவ்விவகாரத்தை உடனடியாக விசாரிக்குமாறு தற்காப்பு அமைச்சர் மாட் சாபு உத்தரவிட்டிருக்கிறார்.
விசாரணை தொடங்கி விட்டதாகக் கூறிய ஆயுதப் படை மேல்விவரம் எதுவும் தெரிவிக்கவில்லை.
“ஆயுதப்படை உறுப்பினர்கள் அதிகாரப்பூர்வமற்றவர்களுக்குப் பணியாற்றுவதாக தெரிந்தால் அவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்”, என அவ்வறிக்கை எச்சரித்தது.
நேற்று ஹிஷாமுடின் அந்த அதிகாரிகள் தமக்கு மெய்க்காப்பாளர்களாக பணியாற்றி வருவதை ஒப்புக்கொண்டார். ஆனால், அது “தற்காலிகமானதே” என்றாரவர்.
அவர்கள் தமக்கும் தம் குடும்பத்தாருக்கும் மிக நெருக்கமானவர்களாக மாறி விட்டார்கள் என்று கூறிய அவர், அவர்களைத் தம்முடனே வேலைக்கு வைத்துக்கொள்ளவும் தயாராக இருக்கிறார். அதற்கு அவர்கள் ஆயுதப் படைகளை விட்டு விலகி வர வேண்டும் என்றாரவர்.