ஹாடி: நஜிப்பை பாஸ் ஏற்றுக்கொள்கிறதா? மகாதிரையே ஏற்றுக்கொண்டுள்ளமே!

 

முன்னாள் பிரதமர் நஜிப்புக்கு எதிராக பாஸின் கதவுகள் மூடப்படாது என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் இன்று மீண்டும் கூறினார்.

அந்த இஸ்லாமியக் கட்சி டாக்டர் மகாதிர் முகமட் அம்னோவிலிருந்து நீக்கப்பட்ட போது அவரை ஏற்றுக்கொண்டது என்றாரவர்.

எங்களை ஏற்றுக்கொள்பவர்களை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். அம்னோவால் 1969 ஆம் ஆண்டில் வெளியேற்றப்பட்ட மகாதிரைகூட ஏற்றுக்கொண்டுள்ளோம் என்று ஹாடி இன்று திராங்கானு, மாராங்கில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

நஜிப் பற்றிய ஊழல் விவகாரங்கள் அம்னோ மீது கடும் தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதால் நஜிப் கட்சியில் அவரின் பங்கேற்பைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற கூப்பாடு அம்னோவில் எழுந்துள்ள வேளையில், ஹாடி இதனைக் கூறியுள்ளார்.

செரி செத்தியா இடைத் தேர்தலில் பாஸுக்காக நஜிப் அரசியல் பரப்புரையில் பங்கேற்க விரும்பினால் தாம் அதை வரவேற்பதாக ஹாடி இதற்கு முன்னர் கூறியுள்ளார்.

செரி செத்தியாவில் பக்கத்தான் ஹரப்பானுக்கான ஆதரவு சரிந்து கொண்டிருக்கிறது. அம்னோவின் ஆதரவு எங்களுக்கு இருக்கிறது. ஆகவே, மாற்றத்திற்கு இடமுண்டு என்று ஹாடி மேலும் கூறினார்.

பாஸுக்கு விட்டுக் கொடுக்கும் நோக்கத்தில் இந்த இடைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை அம்னோ முடிவெடுத்துள்ளது.

பாஸின் வேட்பாளர் டாக்டர் ஹலிமா அலி பிகேஆரின் ஹலிமே அபு பாக்கரை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

ஹரப்பானின் சட்டமன்ற உறுப்பினர் ஷஹாருடின் படாருடின் காலமானதைத் தொடர்ந்து இந்த இருக்கை காலியானது.