118 சோஸ்மா தடுப்புக்காவல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டனர்

 

சுங்கை பூலோ சிறைச்சாலையில் சோஸ்மா சட்டம் 2012-டின் கீழ் தடுத்து வைக்கப்படிடிருந்த மொத்தம் 118 கைதிகள் அவர்களுடைய உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளனர்.

தடுப்புக்காவல் கைதிகளின் பிரதிநிதிகளை தாம் சந்தித்து சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பேசியதாகவும் அதனைத் தொடர்ந்து ஓர் இணக்கம் காணப்பட்டது என்றும் பிரதமர் துறையின் துணை அமைச்சர் முகமட் ஹனிபா மைடின் கூறினார்.

கைதிகள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ள சம்மதித்தனர் என்றும் அவர்கள் உணவு உட்கொள்ளவும் நீர் அருந்தவும் தொடங்கி விட்டனர் என்றும் அவர் சுங்கை பூலோ சிறைச்சாலையில் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

இதற்கு முன்னதாக, துணை அமைச்சர் மைடின் ஹனிபா அங்கு காலை மணி 11.00 லிருந்து கூடியிருந்த கைதிகளின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்தார்

அங்கு கூடியிருந்த கூட்டத்தினரையும் கலைந்து செல்லும்படி ஹனிபா கேட்டுக் கொண்டார்.

கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை. கைதிகள் உண்ணாவிரதத்தை முடித்து விட்டனர். சிறைச்சாலை அதிகாரிகள் அவர்களை நன்கு கவனித்துக் கொள்வார்கள் என்றாரவர்.

சோஸ்மா இரத்து செய்யப்பட வேண்டும் ஏனென்றால் அது ஒரு வகையான கொடுங்கோலாகும் என்றும் அவர் கூறினார்.

சோஸ்மா உள்துறை அமைச்ச்சின் அதிகாரத்திற்கு உட்பட்டது, அதில் நான் தலையிட முடியாது என்று கூறிய அவர், தம்மைப் பொறுத்தவரையில் அது இரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் தமக்கு பிரச்சனையே இல்லை என்றார்.

சோஸ்மா பற்றிய பிரச்சனையை ஆய்வதற்காக ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டிருப்பதாக அமைச்சரவை கூட்டத்திற்குப் பின்னர் தம்மிடம் கூறப்பட்டதாக ஹனிபா தெரிவித்தார்.

வாக்களித்தப்படி பக்கத்தான் ஹரப்பன் அரசாங்கம் சோஸ்மாவை அகற்றும் என்று சட்டத்துறை தலைவர் டோமி தோமஸ் நேற்று கூறியதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.