கிள்ளான் துறைமுகத்தில் இருக்கும், இக்குவானிமிட்டி ஆடம்பரக் கப்பலுக்கு மேற்கொண்ட பயண அனுபவத்தை, பாதுகாப்பு அமைச்சர் மாட் சாபு, இன்று பகிர்ந்து கொண்டார்.
“அக்கப்பலை நான் வெளியில் இருந்து பார்த்தேன், அப்படியொன்றும் பெரியதாகத் தெரியவில்லை, ஆனால் உள்ளே சென்று பார்த்தபோது, ஐயோ, அதை நாம் நினைத்து பார்க்கவே முடியாது.
“அதனுள் லிஃப்ட் இருக்கிறது, நான்கு மாடி. ‘ஜக்குஸி’, ‘சௌனா’ குளியல் இடங்களுடன், உடம்புப் பிடி மையமும் அதனுள் இருக்கிறது.
“சாப்பிடுவதற்குப் பெரிய இடம் உண்டு. தூங்கும் அறையில், பட்டனைத் தட்டினால் கூரை தானாக திறக்கும், இரவில் நிலவையும் நட்சத்திரங்களையும் படுத்துகொண்டே பார்க்கலாம்,” எனக் கிள்ளான் பண்டாமாரானில் நடந்த ஹஜ்ஜூப் பெருநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பேசியபோது மாட் சாபு சொன்னார்.
மாட் சாபுவின் பேச்சைக் கேட்ட மக்கள் ஆச்சரியப்பட்டனர். நீதிமன்ற அனுமதி கிடைத்தவுடன், அந்த ஆடம்பரக் கப்பல் ஏலத்தில் விடப்படும் என்றும் அவர் சொன்னார்.
ஹராப்பான் அமைச்சர்கள் அனுபவம் இல்லாதவர்கள்
ஹராப்பான் அமைச்சர்களில் பலர், அதிக அனுபவம் இல்லாதவர்கள் என்பதையும், அவர்கள் இன்னும் எதிர்க்கட்சியினர் போலவே செயல்படுகிறார்கள் என்றப் பிரதமர் மகாதீரின் எச்சரிக்கையையும் ஒப்புக்கொள்வதாக மாட் சாபு தனது உரையில் தெரிவித்தார்.
“காரணம், நாங்கள் 40 ஆண்டுகளாக எதிர்க்கட்சியினராகவே இருந்துவிட்டோம், ஆக அரசாங்கமாக (ஆளுங்கட்சியாக) மாறியபோது, அது வித்தியாசமாக இருக்கிறது. ஆனால், நாங்கள் விரைவில் கற்றுக்கொள்வோம், கடினமாக உழைக்கிறோம், மலேசியாவை விரைவில் மகிமை வாய்ந்ததாகவும், அற்புதமானதாகவும் மீண்டும் மாற்றி அமைப்போம் என நாங்கள் நம்புகிறோம்,” என்றார் அவர்.