மசீச-வின் ஒரே பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் இருக்கும் வீ கா சியோங், கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
மசீச-வின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், தற்போது மோசமான நிலையில் இருக்கும் தனது கட்சியின் சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு, தான் பொறுப்பேற்க உள்ளதாக வீ கூறியதாக, ‘சைனா பிரெஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மசீச-வில் அவருக்கு எதிராக ஆட்சிக்கவிழ்ப்பு ஏற்பட வாய்ப்புண்டா என்ற கேள்விக்கு, கட்சி உறுப்பினர்களுக்கு இடையே ஏற்படும் முரண்பாடுகளைச் சமாளிக்க, இனிமேலும் முடியாது என அவர் கூறியதாக, சைனா பிரெஸ் மேற்கோளிட்டுள்ளது.
எனவே, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வேலை செய்வதற்கு ஏற்ற, மிகவும் திறமையான ஒரு தலைவர் நியமிக்கப்படுவார் என்று நம்புவதாக வீ தெரிவித்துள்ளார்.
தற்போது, கட்சியின் துணைத் தலைவராக இருக்கும் வீ, ஜொகூர் பாருவில் இந்த அறிவிப்பைச் செய்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் 31-ஆக இருந்த மசீச எம்பி-களின் எண்ணிக்கை, 12-வது பொதுத் தேர்தலின் (2008) போது 15-ஆகக் குறைந்தது. அதனை அடுத்து, 13-வது பொதுத் தேர்தலில் (2013) 7-ஆகக் குறைந்தது.
கடந்த 14-வது பொதுத் தேர்தலில், மசீச 39 வேட்பாளர்களை நாடாளுமன்றத் தொகுதியில் நிறுத்தியது. ஆனால், வீ கா சியோங் மட்டுமே தனது ஆயேர் ஈத்தாம் தொகுதியைத் தற்காத்துகொள்ள முடிந்தது.
தற்போது, 2 சட்டமன்றங்களே மசீச வசம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த பொதுத் தேர்தலின் தோல்விக்குப் பொறுப்பேற்று, இம்முறை தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதில்லை எனக் கட்சியின் தலைவர், லியோ தியோங் லாய் தெரிவித்துள்ளார்.