முன்னாள் ஐஜிபி அமைதிப்பேச்சு வழிநடத்துபவரா? ஆட்சேபிக்கிறார் நூருல்

பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வார், முன்னாள் இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் அப்துல் ரகிம் நூரை தென் தாய்லாந்து அமைதிப் பேச்சு வழிநடத்துபவராக நியமிக்கும் அரசாங்கத்தின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.

டிவிட்டரில் கருத்தைப் பதிவிட்ட நூருல், “அப்பாவி மனிதர் ஒருவரை மிருகத்தனமாகத் தாக்கியவர்” என்று ரகிமை வருணித்தார்.

“கண் கட்டப்பட்டு கைவிலங்கிடப்பட்ட அப்பாவி மனிதரை மிருகத்தனமாகத் தாக்கி மருத்துவ உதவி எதுவும் கொடுக்காமல் பல நாள்களுக்கு அப்படியே கிடக்கட்டும் என்று விட்டுச் சென்ற ஒருவர் (அமைதிப் பேச்சு வழிநடத்துபவராக) நியமிக்கப்பட்டிருப்பதை நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன்.

“பிறகு இம்மனிதர் அடிபட்டவர் எங்கிருக்கிறார், எப்படி இருக்கிறார் என்பது தனக்குத் தெரியாது என்று பொய்யுரைத்தார். இக் கேலிக்குரிய நியமனத்தைச் செய்தவர்கள் அதற்காக வெட்கப்பட வேண்டும்”, என்றாரவர்.

நூருல் அவரின் தந்தை அன்வார் இப்ராகிம் 1998-இல் துணைப் பிரதமராக இருந்தபோது கைது செய்து போலீஸ் காவலில் வைக்கப்பட்டு, கண்வீக்கம் ஏற்படும் அளவுக்கு அடிக்கப்பட்ட சம்பவத்தைதான் குறிப்பிடுகிறார்.