சிஇபி அறிக்கை இரகசியமாக வைக்கப்படலாம்- பிரதமர்

பெருமக்கள் மன்ற (சிஇபி)த்தின் அறிக்கை பொதுவில் வெளியிடப்படாமல் இரகசியமாக வைக்கப்படலாம் என்று பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார்.

“அவர்களின் வேலை புலனாய்வு செய்து எனக்கு அறிக்கை தாக்கல் செய்வதுதான். அறிக்கையை ஏற்கிறேனா இல்லையா என்பது என்னைப் பொறுத்தது. முக்கியமாக நான் முடிவுகள் எடுப்பதற்குத் தேவையான தகவல்களைக் கொடுக்கிறார்கள். அந்த வகையில் இது அரசாங்கம் சம்பந்தப்பட்ட விவகாரம்.

“அரசாங்கத்தில் நாங்கள் செய்யும் முடிவுகளைப் பெரும்பாலும் பொதுவில் வெளியிடுவதில்லை”. இன்று கோலாலும்பூரில் மாநகரங்கள் 4.0 , 4.0 அனைத்துலக மாநாடு மற்றும் கண்காட்சியில் கலந்துகொண்ட மகாதிர் இடையே செய்தியாளர்களைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார்.

மகாதிர் பிரதமர் ஆனதும் செய்த முதல் வேலை ஐவரடங்கிய மக்கள் மன்றத்தை (சிஇபி) அமைத்ததுதான்.

மகாதிரின் நம்பிக்கைக்குரிய டயிம் சைனுடின் தலைமையில் சிஇபி ஒரு வலுவான அமைப்பாக விளங்குகிறது. அது, பெரும்பாலும் அரசுத்தொடர்புடைய 200 நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 350 பேரைச் சந்தித்துத் தகவல்களைத் திரட்டி பொருளாதார, நிதி நிலை பற்றிய அறிக்கை ஒன்றைத் தயாரித்து மகாதிரிடம் கொடுத்துள்ளது.

பக்கத்தான் ஹரப்பான் அரசு அமைந்து 100 நாள் ஆகிவிட்ட நிலையில் இனியும் சிஇபி தேவைதானா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அது தொடர்ந்து இருக்குமா இல்லையா என்பதை மகாதிர்தான் முடிவு செய்ய வேண்டும். அவர், தம் ஆலோசகர்களில் ஒருவராக டயிமும் இருக்க வேண்டும் என்பதைப் பலமுறை குறிப்பிட்டு வந்துள்ளார்.