ஒரு மாட்டுப் பண்ணை மற்றும் இரு இந்து கோயில்களை தகர்ப்பதில் ஈடுபட்டிருந்த கிள்ளான் நகராண்மைக் கழகப் (எம்பிகே) பணியாளர்களுடன் நடந்த நேரடி மோதல் சம்பந்தமாக கிள்ளான், பண்டார் பொட்டானிக்கில் போலீசார் ஐவரை கைது செய்துள்ளனர் என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
கைது செய்யப்பட்ட ஐவரில் பண்ணையின் சொந்தக்காரர், அவரது இரு சகோதரர்கள் மற்றும் இரு மலேசிய சோசலிசக் கட்சியின் (பிஎஸ்எம்) இரு ஆர்வலர்கள் ஆகியோர் அடங்குவர்.
இன்று காலை மணி 10.30 அளவில், மாட்டின் சிறுநீர் மற்றும் சாணம் ஆகியவற்றை எம்பிகே மீது வீசி எறிந்து அவர்களைத் தடுத்ததற்காக அந்தப் பண்ணையின் சொந்தக்காரர் கைது செய்யப்பட்டார் என்று தெற்கு கிள்ளான் ஒசிபிடி ஷம்சுல் அமர் ரமலி கூறியாதாக த சன் கூறுகிறது.
மற்ற நால்வரும் உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களைத் தடுக்கும் முயற்சியில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்டனர் என்று அச்செய்தி மேலும் கூறுகிறது.
கைது செய்யப்பட்ட ஐவரும் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டனர் என்று ஷம்சுல் மேலும் கூறினார்.
த ஸ்டாரின் செய்திப்படி, காலை மணி 8.30 அளவில் அந்த மாட்டுப் பண்ணையைத் தகர்க்க 150 அமலாக்க அதிகாரிகளும் போலீசாரும் அங்கு வந்ததாக பிஎஸ்எம் கிள்ளான் கிளை ஆலோசகர் கே. இராமசாமி கூறினார்.
பண்ணையிலிருந்த 150 மாடுகளில் 30ஐ எம்பிகே பறிமுதல் செய்தது என்று அவர் கூறிக் கொண்டார் என்று அச்செய்தி மேலும் கூறுகிறது. அப்பண்ணையில் 50 ஆடுகளும் இருந்தன.
பண்ணை உடைக்கப்படுவதை நிறுத்துவதற்கு பிஎஸ்எம் முயன்றதாகவும், அங்கு எதிர்ப்பில் பங்கேற்றிருந்தவர்களில் ஒருவர் சாதாரண உடையிலிருந்த ஒரு போலீஸ்காரரை குண்டர் என்ற தவறான எண்ணத்தில் தாக்கியதாகவும் இராமசாமி கூறினார் என்று அச்செய்தி மேலும் கூறுகிறது.
பண்ணையின் சொந்தக்காரர் எ. தேவேந்திரன் என்றும் கைது செய்யப்பட்ட பிஎஸ்எம் ஆர்வலர்கள் நிக் அசிஸ் அபிக் மற்றும் கே. பரஞ்சோதி என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தேவேந்திரன் அந்தப் பகுதியில் ஆடு மாடுகளைப் பல பத்தாண்டுகளுக்கு மேலாக வளர்த்து வருகிறார் என்று பிஎஸ்எம் கிள்ளான் தொகுதி செயலாளர் எம். சிவரஞ்சினி கூறியதாக த சன் செய்து கூறுகிறது.
இந்த இடம் முன்பு புக்கிட் திங்கி எஸ்டேட் என்றும் அதை தாமான் பொட்டானிக்காக மேம்படுத்தியவர் தேவேந்தரணை அங்கு தங்கியிருக்க 16 ஆண்டுகளுக்கு முன்பு அனுமதித்ததாகவும் கூறப்படுகிறது.
சிவரஞ்சினியின் கூற்றுப்படி, கமுடா பெர்ஹாட்டிற்கும் தேவேந்திரனுக்கும் இடையிலான பேச்சளவிலான ஒப்பந்தப்படி தேவேந்திரன் அந்த நிலத்திற்கான அனுமதியை இறுதியில் பெறுவார், மற்றும் அந்நிறுவனம் ஒரு மாட்டுப் பண்னையையும் இரு இந்து கோயில்களையும் அவருக்காக கட்டித் தரும்.
ஆனால், 2016 ஆம் ஆண்டில், மாவட்ட நில அலுவலகம் தேவேந்திரம் வசமிருக்கும் அந்த நிலம் சிலாங்கூர் இஸ்லாமிய இலாகாவுக்கு (ஜாயிஸ்) மாற்றப்பட்டுள்ளதாக அவரிடம் கூறியதாக சொல்லப்படுகிறது.
தமக்கு தற்போதைய நிலத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டருக்குள் மாற்று நிலம் வேண்டும் என்று மாநில அதிகாரிகளுடம் பல சந்திப்புகளில் தேவேந்திரன் கோரினார். ஆனால், மாறாக அவருக்கு 40 கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள கோல லங்கட்டில் நிலம் கொடுக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொள்ள தேவேந்திரன் மறுத்து விட்டதாகவும், பின்னர் கடந்த வாரம் நிலத்தைக் காலி செய்யும்படி அவருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டதாகவும் சிவரஞ்சினி கூறினார்.
இன்றைய உடைப்பு சம்பவத்தில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் ஜி. குணராஜ் தலையிட்டதன் விளைவாக மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தகர்ப்பு வேலை இரு நாள்களுக்குத் தள்ளிப் போடப்பட்டுள்ளது. எனினும், அப்பண்ணையின் ஒரு பகுதி மற்றும் ஓர் இந்து கோயில் தகர்க்கப்பட்டு விட்டதாக சிவரஞ்சினி மேலும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, த ஸ்டார் செய்தியின்படி, இந்த நிலம் ஜாயிஸுக்கு மட்டுமல்ல, ஜேபிஎஸுக்கும் சொந்தமானதாகும். ஜாயிஸ் கட்டடங்கள் கட்டுவதற்கும் ஜேபிஎஸ் அங்குள்ள ஆற்றை விரிவுபடுத்துவதற்கான திட்டங்களுடன் தயாராக இருக்கின்றன. ஆகவே, நிலத்தில் குடியிருக்கும் அவர்களை வெளியேற்றுவதைத் தவிர வேறு வழி இல்லை என்று கிள்ளான் நில அலுவலக உதவி மாவட்ட அதிகாரி முகம்மட் சைபுல் அஸ்ரி கூறினார்.
தற்காலிகமாக, அப்பண்ணையின் மாடுகளும் ஆடுகளும் அருகாமையிலுள்ள இன்னொரு பண்ணைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.