குலா: குறைந்தபட்ச சம்பளம் இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் நிர்ணயிக்கப்படும்

அமைச்சரவை இவ்வாரம் அல்லது அடுத்த வாரம் அதன் வாராந்திரக் கூட்டத்தில் , தொழிலாளர்களுக்கான குறைந்தபட்சச் சம்பளத்தை முடிவு செய்யும் என மனித வள அமைச்சர் எம்.குலசேகரன் இன்று கூறினார்.

தீவகற்ப மலேசியாவிலும் சாபா, சரவாக்கிலும் தனியார் துறையின் தொடக்கநிலைச் சம்பளம் ஒரே மாதிரியாக இருக்கும் என்றும் அவர் சொன்னார்.

“அமைச்சரவையிடம் பரிந்துரை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. அது இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் அதனை விவாதிக்கும்”, என்றாரவர்.

குறைந்தபட்சச் சம்பளம் தொடர்பாக, தேசிய சம்பள ஆலோசனை தொழில்நுட்பக் குழு ஆய்வுகளை நடத்தியதுடன் தொழிற்சங்கங்கள், முதலாளிகள், என்ஜிஓ ஆகியோருடனும் மற்றவர்களுடனும் கலந்து ஆலோசித்துள்ளது என்றும் குலசேகரன் கூறினார்.