கேமரன் மலை தேர்தல் வழக்கில் 52 சாட்சிகள் சாட்சியம் அளிப்பார்கள்

கேமரன் மலை தேர்தல் வழக்கில் எம்.மனோகரனுக்காக 36 பேரும், சி.சிவராஜாவுக்காக 16 பேரும் சாட்சியம் அளிப்பார்கள். வழக்கு செப்டம்பர் 3 தொடங்கி 14 நாள்களுக்கு நடக்கும்.

அதே வேளை மனோகரனின் மனுவைத் தள்ளுபடி செய்யக் கோரி சிவராஜா தாக்கல் செய்துள்ள எதிர்மனுவை நீதிபதி அசிசா நவாவி ஏற்றுக்கொண்டால் வழக்கே நடக்காது. வியாழக்கிழமை சிவராஜாவின் மனுமீது நீதிபதி முடிவெடுப்பார்.

கேமரன் மலை எம்பி- ஆன சிவராஜாவின் வழகுரைஞர் நோர் ஹசிரா, “சிவராஜாவின் சாட்சிகளான 16 பேரின் வாக்குமூலங்களை இன்று தாக்கல் செய்வோம்”, என்றார்.

இதனிடையே மனோகரனின் வழக்குரைஞர்களான எம்.ராஜேந்திரகுமாரும் கே.சண்முகமும் அவர்களின் 36 சாட்சிகளின் வாக்குமூலங்களை ஏற்கனவே நீதிமன்றத்தில் தாக்கல் செய்து விட்டதாகக் கூறினர்.

டிஏபி-இன் மனோகரன், கேமரன் மலை தேர்தல் முடிவு செல்லாதென அறிவிக்கக் கோரி ஜூன் 5-இல் தேர்தல் முறையீடு ஒன்றைச் செய்தார்.