மலேசியா எனது இரண்டாவது இல்லம் என்ற திட்டத்தின் அந்நியர்கள் மலேசியாவை தங்களுடைய நிரந்தர குடியிருப்பிடமாக்கிக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
ஆர்வமுள்ளவர்களுக்கு அதற்கான நிபந்தனைகள் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன மற்றும் இந்தத் திட்டத்திற்கான தகவல் பகிரங்கமாகக் கிடைக்கும் என்று பிரதமர் அலுவலகம் ஓர் அறிக்கையில் கூறுகிறது.
அந்நியர்கள், அவர்கள் எந்த இனத்தினராக இருந்தாலும், வாங்கும் சொத்துகளுக்கு மலேசியா சில நிபந்தனைகளை விதிக்கிறது. அவை பற்றிய தகவல் வெளிப்படையாகக் கிடைக்கும்.
ஆனால், சொத்துக்கள் வாங்குதல் இயல்பாகவே இந்நாட்டில் குடியிருப்பதற்கான உத்தரவாதத்தை அளிக்கவில்லை என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
அந்நியர்கள் ஜோகூர், போரஸ்ட் சிட்டியில் சொத்துக்கள் வாங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று பிரதமர் மகாதிர் நேற்று ஒரு சலசலப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகம் இந்த விளக்கத்தை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மகாதிர் கூறியிருந்தது குறிப்பிடப்படவில்லை.
மேலும், மலேசிய அரசாங்கம் தொழில் நுட்பத்தை இந்நாட்டிற்கு மாற்றம் செய்யும், உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை அளிக்கும் மற்றும் தொழில் துறைகளை அமைத்தல் போன்றவற்றுக்கான அந்நிய நேரடி முதலீட்டை வரவேற்கிறது.என்று பிரதமர் அலுவலக அறிக்கை கூறுகிறது.
சீனாவிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வரவேற்கப்படுகின்றனர். ஆனால் அவர்கள் குடிநுழைவு இலாகாவின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கை கூறியது.
2017 ஆம் ஆண்டில், மலேசியா 2.3 மில்லியன் சீனச் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்தது. எதிர்வரும் ஆண்டுகளில் 10 மில்லியன் சீனச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் என்று எதிர்பார்க்கிறது என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.
























