வாக்குறுதி அளித்தபடி டாக்டர் எம் அதிகாரத்தை வழங்குவார், அன்வார் நம்புகிறார்

முன்னர் வாக்குறுதி அளித்தபடி, பிரதமர் பதவியைத் துன் டாக்டர் மகாதிர் முகமட் தன்னிடம் வழங்குவார் என அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்ததாக ‘நிக்கேய் ஆசியான் ரிவியூ’ செய்தி வெளியிட்டுள்ளது.

“நான் அவரை நம்புகிறேன், அவரிடம் கேள்வி கேட்க எனக்கு எந்தக் காரணமும் கிடையாது,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“எனக்கும் அவருக்கும் நல்ல உறவு இருக்கும் வரை, மற்றவையெல்லாம் முக்கியமல்ல,” எனவும் அவர் கூறியுள்ளார்.

அரசு நிறுவனங்களைச் சீர்திருத்த, அக்டோபர் மாதத்தில், ஓர் இடைத்தேர்தலின் மூலம், நாடாளுமன்றத்தில் நுழைய அன்வார் எண்ணியுள்ளதாகவும் அச்செய்திகள் கூறுகின்றன.

மகாதிரின் நிர்வாகத்தில் குறுக்கிட விரும்பவில்லை எனவும் அன்வார் நிக்கேய் ஆசியான் ரிவியூ-இடம் அன்வார் கூறியுள்ளார்.

அரசாங்கச் சீர்திருத்தம் பற்றி பேசியபோது, வறுமையை ஒழிக்க வேண்டும் எனும் அதன் அசல் நோக்கத்தைச் செயல்படுத்த ‘பூமிபுத்ரா கொள்கை’ திரும்ப வேண்டும் என்று அவர் கூறினார்.

“இன அடிப்படையிலான அக்கொள்கை, ஒருசிலரின் பினாமிகளைப் பணக்காரர்களாக்க தவறாகப் பயன்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.

“ஓரங்கட்டப்பட்ட, சிறுபான்மையினர் மற்றும் பூமிபுத்ராக்களுக்கு உதவக்கூடிய கொள்கைகளுடன், ஓர் உறுதியான நடவடிக்கையாகத் தொடர வேண்டும், பூமிபுத்ரா அடிப்படையில் அல்ல,” என்று அவர் மேலும் கூறினார்.

இன்று வெளியிடப்பட்ட நேர்காணலின் படி, சீனா முதலீடுகளை மாற்றியமைக்கும் மகாதீரின் நடவடிக்கைக்கு அன்வார் ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கான முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.