தேர்தல் முறையையும் இசி–யையும் மாற்றி அமைக்க ஆலோசனை

மலேசியாவில் மே 9 பொதுத் தேர்தலே ‘first past the post (எப்பிடிபி) முறைப்படி நடந்த கடைசித் தேர்தலாக இருக்கலாம். அதேபோல் தேர்தல் ஆணையம் ஒரு பொதுத் தேர்தலை நடத்தியது அதுவே கடைசி முறையாகவும் இருக்கலாம்.

அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட தேர்தல் சீரமைப்புக்குழு (இஆர்சி) எப்பிடிபி-க்குப் பதிலாக விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையைக் கொண்டு வரும் சாத்தியத்தை ஆராய்ந்து வருகிறது.

எப்பிடிபி நியாயமற்றது என்று நிறைய புகார்கள் வந்துள்ளன. அதனால் வேறு பொருத்தமான முறைகளை ஆராய்து கொண்டிருக்கிறோம்.

“உங்களுக்கு 60 விழுக்காடு வாக்குகள் கிடைக்குமானால், உங்களுக்கு 60 விழுக்காடு இடங்களும் கிடைக்க வேண்டும்”, என்று அக்குழுவின் தலைவர் அப்துல் ரஷிட் அப் ரஹ்மான் இன்று புத்ரா ஜெயாவில் கூறினார்.

போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவர் ஒரு வாக்கைக் கூடுதலாகப் பெற்றுவிட்டால் போதும் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இந்த முறையை First Past the Post System என்பார்கள். அதாவது வெற்றி பெறும் வேட்பாளர் 50 விழுக்காட்டுக்குமேல் வாக்குகளைப் பெற்று அறுதிப் பெரும்பான்மை பெற வெண்டும் என்பதில்லை. எளிய பெரும்பான்மை போதும்.

இதைத்தான் இஆர்சி மாற்றி அமைக்க எண்ணுகிறது.

அதேபோல் இசி-க்குப் பதிலாக வேறொரு அமைப்பை உருவாக்குவது பற்றியும் ஆராயப்படுவதாக முன்னாள் இசி தலைவரான அப்துல் ரஷிட் கூறினார்.