சிரம்பான் உயர் நீதிமன்றம், பிகேஆர் கட்சியைச் சேர்ந்த டாக்டர் எஸ்.ஸ்ரீராமின் தேர்தல் மனுவுக்கு எதிராக அம்னோ துணைத் தலைவரும் நெகிரி செம்பிலான் முன்னாள் மந்திரி புசாருமான முகம்மட் ஹசான் தாக்கல் செய்த ஆட்சேபனை மனுவை நிராகரித்து டாக்டர் ஸ்ரீராமின் மனு மீது செப்டம்பர் 12-இல் விசாரணை தொடங்க வேண்டும் எனப் பணித்தது.
நாட்டின் 14ஆவது பொதுத்தேர்தலில் ரந்தாவ் சட்டமன்றத் தொகுதியில் தாம் வேட்புமனு தாக்கல் செய்ய முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டதை ஆட்சேபித்து ஸ்ரீராம் அந்தத் தேர்தல் மனுவைத் தாக்கல் செய்தார். ஸ்ரீராம் தடுத்து நிறுத்தப்பட்டதால் முகம்மட் போட்டியின்றி வென்றதாக அறிவிக்கப்பட்டது.
முகம்மட்டின் ஆட்சேபனை மனு நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை நீதிபதி அஸிமா ஒமார் வெளியிடவில்லை.
முகம்மட் தரப்பில் எட்டு ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டதாகவும் எட்டும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டன என்றும் ஸ்ரீராமின் வழக்குரைஞர் ரபிக் ரஷிட் அலி, கூறினார்.