செப்டெம்பர் 8 இல் நடைபெறும் பலாக்கோங் இடைத் தேர்தலில் மசீச தோற்றால் அது பிஎன்னில்ருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்று டிஎபி தலைவர் டான் கோக் வை இன்று மசீசவுக்கு சவால் விட்டார்.
அவர்கள் இடைத் தேர்தலில் தோற்றால் அவர்கள் எங்களுடன் ஹரப்பானில் சேர்ந்து கொள்ள வேண்டும்.
மசீசவை ஒரு பங்காளித்துவக் கட்சியாக நாங்கள் ஏற்றுவது பற்றி ஆலோசிப்போம், ஆனால் அது பிஎன்னிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும், அது ஒரு நிபந்தனை என்று ஹரப்பான் வேட்பாளர் ஓங் சியு கியுடன் தொகுதியில் சுற்றி வந்த போது அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
கடந்த வியாழக்கிழமை, மசீசவின் தலைமைச் செயலாளர் ஓங் கா சுவான் பலாக்கோங் இடைத் தேர்தல் முடிவு பிஎன்னில் மசீசவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்று கூறியதாக ஊடகச் செய்தி அவரை மேற்கோள் காட்டி கூறுகிறது.
ஹரப்பானிடமிருந்து அத்தொகுதியைக் கைப்பற்றுவது கடினம் என்று இந்த இடைத் தேர்தலில் மசீசவின் பரப்புரை இயக்குனரும் மசீசவின் உதவித் தலைவருமான சியு மெய் ஃபன் ஒப்புக்கொண்டுள்ளார்.
செராஸ் நாடாளுமன்ற உறுப்பினரான டான் இனம் மற்றும் சமயம் அடிப்படையிலான எந்த ஒரு கட்சியும் இந்நாட்டில் இருக்க முடியாது ஏனென்றால் அது ஒற்றுமையின்மையை உருவாக்கும் என்றாரவர்.
செப்டெம்பர் 8 இல் நடக்கும் வாக்களிப்பில் 60 விழுக்காட்டிற்கும் கூடுதலான வாக்காளர்கள் வாக்களிப்பார்கள் என்று தாம் எதிர்பார்ப்பதாகக் கூறிய ஹரப்பான் வேட்பாளர் வோங் சியு கி, அவர்களின் தேர்தல் இயந்திரம் 80 விழுக்காட்டினரை வாக்களிக்கச் செய்ய முயன்று வருவதாகக் கூறினார்.