பதவி விலகப் போகிறேன் என்ற ஊகம் முட்டாள்தனமானது, குவான் எங் கூறுகிறார்

 

அமைச்சரவையிலிருந்து விலகப் போகிறேன் என்ற ஊகம் முட்டாள்தனமானது என்று நிதி அமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.

ஊடகங்களுக்கு விற்பனைகள் மற்றும் சேவைகள் வரி (எஸ்எஸ்டி) பற்றி செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்துக் கொண்டிருக்கையில், தாபுங் ஹாப்பான் நடவடிக்கைகள் செப்டெம்பர் 30-இல் முடிவுக்கு வருமா என்று கேட்ட போது, அவர் இவ்வாறு கூறினார்.

நான் பதவி விலகப் போவதாக ஒரு வதந்தி இருந்தது. அது போலத்தான் இதுவும். காத்திருப்போம். டுரியான் பழுத்து விழுந்த பிறகுதான் சுவையாக இருக்கும் என்றாரவர்.

இம்மாதிரியான பேச்சு கடந்த ஒரு மாதமாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த வதந்தியின் நோக்கம் என்ன என்று தமக்குத் தெரியாது என்று அவர் கூறினார்.

அமைச்சரவையிலிருந்து விலகப் போகிறீர்களா என்று கேட்டதற்கு, “நிச்சயமாக இல்லை, லா”, என்று பதிலளித்தார்.

ஒரு சீனரை நிதி அமைச்சராக நியமித்ததற்காக பிரதமர் மகாதிர் கடுமையான குறைகூறலுக்கு ஆளானார்.

44 ஆண்டுகளுக்குப் பிறகு நிதி அமைச்சரான ஒரே சீனர் லிம். இது பற்றிய குறைகூறல்களுக்குப் பதில் அளித்த குவான் எங், “நான் என்னை ஒரு சீனராகக் கருதவில்லை. நான் ஒரு மலேசியன்”, என்றார்.

முன்னதாக, லிம் வெறும் வரவு செலவு கணக்கு வைப்பவர்தான் (புக்கீப்பர்). நிதி அமைச்சின் முக்கிய பங்குகள் எல்லாம் அஸ்மின் அலியின் பொருளாதார விவகார அமைச்சுக்கு மாற்றப்பட்டு விட்டது என்று மசீச துணைத் தலைவர் வீ கா சியோங் கூறியிருந்தார்.