மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தால் (எம்எசிசி) விசாரிக்கப்பட்டு வரும் ஒற்றர் துறையின் முன்னாள் உயர்மட்ட அதிகாரிகள் மொத்தம் யுஎஸ்$12 மில்லியனை மத்தியக் கிழக்கு வட்டாரத்திலிருந்து பெற்றிருக்க வேண்டும்.
இப்பணம் மலேசியாவுக்கு மே 9 பொதுத் தேர்தலுக்கு முன்னதாகக் கொண்டு வரப்பட்டது என்று பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த விசாரணை அதிகாரி கூறினார்.
அப்பணத்தின் மூலம் பற்றிய மேல்விபரங்களை அவர் கூற மறுத்து விட்டார்.
அவர்கள் தங்களுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி மலேசிய விமானநிலையத்தின் சிறப்பு வழியை உபயோகப்படுத்தியுள்ளனர் என்பதை தாங்கள் கண்டுள்ளதாகக் கூறிய அவர், கொண்டுவரப்பட்ட ரொக்கம் தேர்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதா என்பதை எம்எசிசி விசாரித்து வருகிறது என்று மேலும் கூறினார்.
முதல் முக்கிய கேள்வி: நமது தேசியப் பாதுகாப்பு மீறப்பட்டுள்ளது. எப்படி இந்தப் பணம் எவருக்கும் தெரியாமல் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்பது ஒரு பிரச்சனை. வேறு எதையாவது சொல்லி விமான நிலையத்தின் பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியாகி இருக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம் என்றாரவர்.
இரண்டாவது, அந்நிய வட்டாரத்திலிருந்து அரசாங்க இலாகா நிதி பெற வேண்டிய அவசியம் என்ன? எதற்காக? இதுவும்கூட தேசியப் பாதுகாப்பு மீறலாகும் என்று அவர் மேலும் கூறினார்.
இப்பணம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் (கேஎல்ஐஎ) வழியாக அல்லது இன்னொரு விமான நிலையத்தின் வழியாகக் கொண்டுவரப்பட்டதா என்பதைக் கூற அந்த அதிகாரி மறுத்து விட்டார்.
இன்று முன்னேரத்தில் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் எம்எசிசியின் துணை ஆணையர் அஸாம் பாக்கி விசாரனையின் போது யுஎஸ்$6.3 மில்லியன் கைப்பற்றப்பட்டதாகவும் இன்னும் யுஎஸ்$5 மில்லியன் தேடப்பட்டு வருவதாகவும் கூறினார்.
ஒற்றர் துறையின் ஏழு முன்னாள் அதிகாரிகளையும் அப்பிரிவின் முன்னாள் தலைவர் ஹஸ்னா அப்துல்லா ஹமிட்டையும் எம்எசிசி கைது செய்துள்ளது. விசாரனைக்கு உதவுவதற்காக ஹஸ்னா ஐந்து நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு, எம்எசிசி 47 வயதான ஒரு வணிகரை கிளந்தானில் கைது செய்தது. அவர் யுகேயில் நிரந்தரக் குடியிருப்பு தகுதியைக் கொண்டுள்ளார்.
இந்தக் கைது நடவடிக்கைகளுக்குப் பின்னர், விசாரணையாளர்கள் சைபர்ஜெயாவிலுள்ள ஓர் அடுக்ககத்தில் மொத்தம் யுஎஸ்$4.07 மில்லியன் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர்.
இந்த விவகாரத்தில் சந்தேகப்படும் நபர்கள் ‘நாட்டிச் செல்லும்’ மனிதர் அந்த வணிகர்தான் என்று அறியப்பட்டுள்ளது.