ஜொகூர் பாருவில், ‘100 நாள் நம்பிக்கை கூட்டணி ஆட்சியில் மாறியதும் மாறாததும்’ கருத்தரங்கம்

எதிர்வரும் செப்டம்பர் 1, சனிக்கிழமை ஜொகூர் செம்பருத்தி தோழர்கள் ஏற்பாட்டில், ‘நம்பிக்கை கூட்டணியின் 100 நாள் ஆட்சியில், மாறியதும் மாறாததும்’ கருத்தரங்கம், ‘பிஸ்’ தங்கும்விடுதி (Hotel Bzz) ஜாலான் ஜோகேட் 8, தாமான் நேசா, ஸ்கூடாய், ஜொகூர் பாருவில் நடைபெறவுள்ளது.

இக்கருத்தரங்கில், நம்பிக்கை கூட்டணியின் சார்பில் ஜொகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர், டாக்டர் இராமகிருஷ்ணன் சுப்பையா, தேசிய முன்னணி சார்பில் ம.இ.கா. தேசியத் துணைத் தலைவர், டத்தோ ஶ்ரீ எஸ். கே. தேவமணி, இடதுசாரிகள் சார்பில் மலேசிய சோசலிசக் கட்சியின் தலைமைச் செயலாளர் தோழர் சிவராஜன் ஆறுமுகம் மற்றும் மக்கள் பிரதிநிதியாக டாக்டர் தமிழ்ச்செல்வன் சுப்பையா ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ள உள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியின் நோக்கம்

கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதியோடு, பக்காத்தான் ஹராப்பான் புதிய அரசாங்கம் 100-வது நாள் நிறைவை எட்டியது. 14-வது பொதுத் தேர்தலின் போது ‘100 நாள்கள் 10 வாக்குறுதிகள்’ என ஹராப்பான் தரப்பு பிரச்சாரம் செய்தது, அதன் அமோக வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. ஆக, இந்த 100 நாள்களில் அந்த 10 வாக்குறுதிகளைப் பற்றி, ஆளும் தரப்பு, எதிர்க்கட்சி, இடதுசாரி அரசியல்வாதிகளோடு பொது மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளவே இந்த ஆய்வரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செம்பருத்தி தோழர்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான வீரம்மா முத்து நம்மிடம் தெரிவித்தார்.

“நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஆட்சி செய்து வந்த தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு ஓய்வு கொடுத்து, புதிய அரசாங்கத்தை மக்கள் தேர்வு செய்தனர். எந்தவொரு கலவரமும் இல்லாமல், சுமூகமான முறையில், ஆட்சி மாற்றம் நடந்தது, மலேசியர்கள் ஜனநாயக அமைப்பு முறையில் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் அரசியல் முதிர்ச்சியையும் காட்டுகிறது.”

“61 ஆண்டுகளாக, இன வாரியான கூட்டணி கட்சிகளின் ஆட்சியில் நாட்டில் மேம்பாட்டு திட்டங்கள், பொருளாதார வளர்ச்சி மற்றும் இனங்களுக்கு இடையிலான சகிப்புத்தன்மை பேணி காக்கப்பட்டு வந்திருந்தாலும்; பரவலாக விமர்சனத்திற்கு உள்ளாகியதையும் நாம் மறுக்க முடியாது,” என்றார் வீரம்மா.

தற்போதைய புதிய அரசாங்கம் பல்லினக் கட்சிகளின் கூட்டணியில், புத்தாக்க அரசியல் பாதையில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தி வந்தாலும்; மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வது பெரிய சவாலாக இருக்கப் போகிறது என்பதை இந்த 100 நாள் தெளிவுப் படுத்துகிறது என்றும் அவர் கூறினார்.

“பெரும்பான்மை மக்களின் வரவேற்பைப் பெற்றபோதிலும், ஒரு சாரார் பல கேள்விகளுடன் தங்கள் ஆதகங்களை வெளிபடுத்தியே வருகின்றனர் என்பது உண்மை.”

“ஆக, பொது மக்களின் பார்வையில் மட்டுமின்றி, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, இடதுசாரிகள் மற்றும் அரசு சார அமைப்பினர் இந்த வரலாற்று பூர்வமான புதிய அரசாங்கத்தின் 100-வது நாளை எவ்வாறு பார்க்கின்றனர்? என்னென்ன எதிர்பார்ப்புகள் அவர்கள் மத்தியில்? இதனை அலசி ஆராயவே இந்த நிகழ்ச்சி ஏற்பாடாகியுள்ளது,” என்றார் வீரம்மா.

நிகழ்ச்சி தொடர்பான மேல் விவரங்களுக்கு, 013 758 6881 அல்லது 012 749 9761 என்ற எண்களில் ஏற்பாட்டுக் குழுவினரைத் தொடர்பு கொள்ளலாம்.