பெட்ரோன் நிறுவனத்தை, அரசாங்க வாகனங்களுக்கான எண்ணெய் வழங்குநர்களில் ஒருவராக நியமித்தது, ஓர் ஆரோக்கியமான போட்டியை உருவாக்குவதற்காக என நிதியமைச்சர் விளக்கினார்.
இன்று மாலை, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையின்படி, அரசாங்க வாகனங்களுக்கு எண்ணெய் வழங்கும் நிறுவனங்களில் பெட்ரோன் ஒரே நிறுவனம் அல்ல எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
1997 ஆம் ஆண்டு முதல், அரசாங்கத்தின் பயன்பாட்டிற்காக, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விநியோகிப்பாளர்களாக பெட்ரோனாஸ் மற்றும் ஷெல் இருப்பதை வலியுறுத்த வேண்டும்,” என அவ்வறிக்கை கூறிற்று.
பெட்ரான் நிறுவனத்திற்கு, சாதாரண நிர்வாக விதிகளின் படிதான் நியமனம் வழங்கப்பட்டது என நிதி அமைச்சு கூறியுள்ளது.
“இது பெட்ரோல் மற்றும் டீசல் வழங்குநர்கள் மத்தியில் ஆரோக்கியமான போட்டியை உருவாக்கும்,” என்று அது மேலும் கூறியுள்ளது.
பிரதமர் மகாதிரின் மகன், மிர்ஸான் மகாதிர், பிலிப்பைன்ஸை தளமாகக் கொண்ட ‘பெட்ரோன் கார்ப்பரேஷன்’ இயக்குநர்களில் ஒருவராக இருப்பதால், இச்செய்தி மக்களிடையே பரவலாக பேசப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2010 முதல், மிர்ஸான் அந்நிறுவனத்தின் இயக்குநராக இருக்கிறார்.
நிதி அமைச்சின் கூற்றுப்படி, அரசாங்க வாகனங்களுக்குப் பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை.
“தகுதியுள்ள பிற நிறுவனங்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்,” என்று அவர் கூறினார்.