அகோங்கின் பிறந்த நாளை ஒட்டிய இரண்டு அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் இரத்து செய்யப்பட்டன

எதிர்வரும் செப்டம்பர் 9-ம் தேதி, யாங் டி-பெர்த்துவான் அகோங் சுல்தான் முஹம்மத் V -இன் பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்ட ,  அதிகாரப்பூர்வ பிறந்தநாள் விழா மற்றும் அரச தேநீர் விருந்து ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளும் இரத்து செய்யப்படுவதாக இஸ்தான் நெகாரா அறிவித்துள்ளது.

அரண்மனை நிர்வாக இயக்குநர், வான் அஹ்மாட் டாலான் அப்துல் அஸிஸ் இதனை இன்றிரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அந்நிகழ்ச்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை, ‘தாபோங் ஹராப்பான் மலேசியா’ நிதிக்கு கொடுத்துவிடுமாறு, மாமன்னர் கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“மாமன்னரின் பிறந்தநாளை ஒட்டிய மற்ற அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள், அட்டவணையிட்டபடி நடைபெறும்.

“2018-ம் ஆண்டுகான, பிறந்தநாள் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ள அரசாங்கத்திற்கு, மாமன்னர் பிரதமர் துறை இலாகாவின் வழி நன்றி தெரிவித்துக் கொண்டார்,” என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, தாபோங் ஹராப்பான் நிதி திரட்டு, அடுத்த மாதம் நிறுத்தப்படுமென பிரதமர் மகாதிர் அறிவித்துள்ளார்.

புதிய அரசாங்கம் நாட்டின் கடனை அடைக்க, மலேசியர்கள் அனைவரும் உதவும் நோக்கோடு, கடந்த மே 30-ல் அந்நிதி திரட்டு தொடங்கப்பட்டது.

இன்றைய தினம், மாலை 3 மணி அளவில் RM179.9 மில்லியன் நிதி திரட்டப்பட்டுள்ளது.