புத்ரா ஜெயா அரசாங்க வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கும் மூன்று நிறுவனங்களில் ஒன்றாக பெட்ரோனை நியமித்திருப்பதால் பல கேள்விகள் எழுகின்றன என முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறினார்.
பெட்ரோன் உரிமையாளர் என்ற கேள்விக்கு விடை தெரிய வரும்போது அது வேறு பல கேள்விகளை எழுப்புகிறது என நஜிப் கோலாலும்பூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பெட்ரோனின் தலைமை நிறுவனம் பெட்ரோன் கார்ப்போரேசன். அது பிலிப்பின்சைத் தளமாகக் கொண்டு செயல்படுகிறது. அதில் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் மகன் மிர்சான் ஒரு பங்குதாரர், இயக்குனர். அவர் சார்ந்துள்ள ஒரு நிறுவனம் அரசாங்க வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக நியமிக்கப்பட்டிருப்பதுதான் ஏன் என்ற கேள்வியை எழுப்புகிறது.
மலேசியாவில் செயல்படும் பெட்ரோனில் மிர்சான் பன்குதாரர் அல்ல, அதன் நடவடிக்கைகளிலும் அவருக்குத் தொடர்பில்லை.
பெட்ரோன் நியமனம் பற்றி நேற்று அறிக்கை விடுத்த நிதி அமைச்சு எரிபொருள் வழங்கும் நிறுவனங்களிடையே ஆரோக்கியமான போட்டியை ஊக்குவிப்பதே அதன் நோக்கம் என்றது. இதனால் அரசாங்கத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் அது கூறியது.
இதனால் பாதிப்பு தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாசுக்குத்தான் என்று நஜிப் முகநூலில் பதிவிட்டிருந்தார்.
1997-இலிருந்து பெட்ரோனாசும் ஷெல்லும்தான் அரசாங்க வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கும் நிறுவனங்களாக செயல்பட்டு வந்துள்ளன. இப்போது பெட்ரோனும் சேர்ந்து கொண்டிருக்கிறது.
“பெட்ரோனாஸ் நாட்டுக்கு மலேசிய மக்களுக்குச் சொந்தமான நிறுவனம். பெட்ரோனாசுக்குக் கிடைத்து வந்த வருமானத்தை அரசாங்கமே கெடுப்பானேன்?
“மலேசியாவில் எல்லாப் பகுதிகளிலும் பெட்ரோனாசுக்கும் ஷெல்லுக்கும் பெட்ரோல் நிலையங்கள் உள்ளன. மலேசிய அரசாங்க வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க அவை போதுமே”, என்றவர் குறிப்பிட்டார்.
பெட்ரோனைச் சேர்த்துக் கொண்ட அரசாங்கம் கால்டெக்ஸ், பெச்பி போன்ற மற்ற எண்ணெய் நிறுவனங்களைச் சேர்த்துக்கொள்ளாதது ஏன் என்றும் பெக்கான் எம்பி கேள்வி எழுப்பினார்.
இதனிடையே, கூட்டரசுப் பிரதேச அம்னோ இளைஞர் தலைவர் ரஸ்லான் ரபிபி- யும் பெட்ரோன் நியமனம் தொடர்பில் நிறைய கேள்விகள் எழுவதால் அரசாங்கம் அது குறித்து மேலும் விளக்கமளிக்கக் கடமைப்பட்டுள்ளது என்றார்.