அம்னோ : பெட்ரோன் பிரச்சினையில் அன்வார் ஏன் அமைதியாக இருக்கிறார்?

அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ எரிபொருள் வழங்கும் நிறுவனமாக பெட்ரோன் நியமிக்கப்பட்டது தொடர்பில், அன்வார் இதுவரை கருத்துரைக்காமல் இருப்பதை அம்னோ தலைவர்கள் சிலர் கேள்வி எழுப்பினர்.

பிரதமர் துன் டாக்டர் மகாதிரின் அதிகாரத் துஷ்பிரயோகத்தை, அன்வார் மூடி மறைப்பது போல் இருப்பதாக அம்னோ உச்சமன்ற உறுப்பினர் லோக்மான் நூர் ஆடம் தெரிவித்தார்.

“ஆக, இன்று டாக்டர் மகாதிர் செய்யும் தவறுகளை, ஊழலை அன்வார் மூடி மறைக்கிறார், அவரது பிரதமர் பதவிக்கு ஆபத்து நேரிடும் என்ற பயத்தில், என்று நாங்கள் கருதுகிறோம்.

“இன்றையப் பிரதமரால் துன்புறுத்தப்படும் மக்களின் தலைவிதியைப் பாதுகாக்க, அன்வாருக்குப் போதுமான அளவு தைரியமில்லை,” என்று அவர் கூறினார்.

இப்போது மலேசியர்களால் எதையும் செய்ய முடியாது, பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தால் நடத்தப்படும் அனைத்து மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களையும் ஏற்றுக்கொள்ள மட்டுமே முடியும் என்றும் அவர் சொன்னார்.

“அன்வாருக்குத் தைரியம் இருந்தால், அவர் இந்த அரசாங்கத்திற்கு எதிராக குரல் எழுப்புவார், அவருக்குத் தைரியம் இருந்தால். அவருக்குத் தைரியம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

“ஆகவே, மக்கள்தான் இன்றைய அரசாங்கத்திற்கு எதிராக, ஹராப்பானின் ஊழலுக்குத் துணை போகும் அன்வாருக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்,” என்றார் அவர்.