அன்வாரின் பொறுமையும், மகாதீரின் வில்லங்கமும்!

மலேசிய அரசியலில் கடந்த கால் நூற்றாண்டாக மிகவும் பக்குவப்பட்ட தலைவர் ஒருவர் உண்டென்றால், அவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்தான். அதற்குக் காரணம், அண்மைக் காலத்தில் அவர் பெற்ற பாடமும் படிப்பினையும் அப்படி!.

ஐந்து மாமாங்க காலத்திற்கு அயராமல் ஆட்சிக் கட்டிலில் ஒட்டிக் கொண்டிருந்த தேசிய முன்னணி அரசு, இந்த நாட்டிற்கு ஆற்றிய அரும்பணிகள் ஏராளம். ஆனாலும், நீதிபரிபாலன கட்டமைப்பு, தேர்தல் ஆணையம், சங்கப் பதிவகம், காவல் துறை போன்ற பொது அமைப்புகளை தேசிய முன்னணி தன் அதிகார பீடத்தின் பக்கம் வளைத்தது, பொருள் விலை ஏற்றத்தால் மக்கள் பட்ட துயரை எண்ணிப் பாராமல் எல்லாம் கடவுளின் செயல் என்று சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொண்டது, அளவிற்கு அதிகமான பண அரசியல் இவற்றால் நெடிய பாரம்பரியம் கொண்ட தேசிய முன்னணி ஆட்சியை மக்கள் விளக்கி வைத்தனர்.

இதனால், மக்கள் பொதுவாக மன நிறைவு கொண்டனர். குறிப்பாக இளைய சமுதாயத்தினர் இன்னும் ஒருபடி கூடுதலாக புது நம்பிக்கை தீபத்தை மனதில் ஏற்றி வைத்தனர். 61-ஆவது மெர்டேக்கா தின வாழ்த்துச் செய்தியில், கொடியவர்களிடம் இருந்து விடுதலைப் பெற்றதால் நாடு இரண்டாவது விடுதலையை அடைந்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டது சற்று மிகையாக இருக்கலாம். ஆனாலும், நாட்டு மக்கள் தேசிய அளவில் ஒரு புதிய கோணத்தை.., புதிய பாதையை.., புதிய பரிமானத்தை ஆளுந்தரப்பிடத்தில் எதிர்பார்க்கின்றனர் என்பது மட்டும் உண்மை.

ஆனாலும், இந்த உணர்வெல்லாம் மக்கள் நீதிக் கட்சி(பிகேஆர்) தொண்டர்களிடம் பிரதிபலிக்கிறதா என்று சொல்ல முடியவில்லை. காரணம், புதிய ஆட்சியை நம்பிக்கைக் கூட்டணி நிறுவிய நாள் முதலே அவர்களிடம் நெருடலான உணர்வும் இனம்புரியாத ஒருவித ஐய உணர்வும் ஏற்பட்டுள்ளன.

அடுத்தடுத்த கட்டங்களில் இவை மாறும் அல்லது மறைந்து போகும் என்று என்ற நிலை ஏற்படாத அளவிற்கு அடுத்தடுத்த சம்பவங்களும் சங்கிலியைப் போல தொடர்கின்றன.

தேர்தலுக்கு அடுத்த நாள் துன் மகாதீர் பிரதமராக பதவி ஏற்றதும், அடுத்த வேளையாக நான்கு கட்சிகளின் தலைவர்கள் துணைப் பிரதமராகவும் முக்கிய அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டனர். அந்த சூட்டோடு சூடாக, ஐவர் கொண்ட சான்றோர் அவையை அரசுக்கு ஆலோசனை வழங்கும்பொருட்டு பிரதமர் நியமித்தார். இந்த சான்றோர் அவைக்கு, துன் டாய்ம் ஜைனுடினை தலைவராக நியமித்ததை பிகேஆர் கட்சியினர் இரசிக்கவில்லை.

காரணம், கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆட்சியில் இருந்தும் அம்னோவில் இருந்தும் அன்வார் விலக்கப்பட்டபோது, அன்வாருக்கு எதிராக காய் நகர்த்தப்பட்டதில் குயுக்தியாளராக செயல்பட்டவர் டாய்ம் என்று பிகேஆர் கட்சியினர் இன்னமும் நம்புவதாகத் தெரிகிறது.

அடுத்து, சிலாங்கூர் மந்திரி பெசாராக இருந்த டத்தோஸ்ரீ அஸ்மினை பொருளாதாரத் துறை என்று ஒரு புதிய துறையை உருவாக்கி, அதில் வலுக்கட்டாயமாக அமர்த்தியதையும் பிகேஆர் தலைவர்களும் தொண்டர்களும் இரசிக்கவில்லை. காரணம், இந்த இரு முக்கிய முடிவிலும் பிகேஆர் கட்சி ஆலோசிக்கப்படவில்லை என்பதுதான்.

தன் கட்சியினர் கொந்தளித்தாலும், அதைப்பற்றி வெளியில்  காட்டிக் கொள்ளாத அன்வார், “மகாதீருக்கு அனைத்து உரிமையும் உண்டு; அவர் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இத்தனைக்கும் நம்பிக்கைக் கூட்டணி அரசின் அச்சாணியாக இருப்பது தங்களுடைய கட்சிதான்; இருந்தாலும் தங்களின் சங்கடம் தொடர்கிறதே என்ற வருத்தத்தில் பிகேஆர் கட்சியினர் இருந்தனர். இப்படிப்பட்ட நிலையில், தென் தாய்லாந்தில் வீரியத்துடன் செயல்படும் முஸ்லிம் கிளர்ச்சிக்காரர்களுக்கும் பேங்காக் அரசத் தரப்பிற்கும் இடையே நடுவராக செயல்பட டான்ஸ்ரீ அப்துல் ரகிம் நோரை நம்பிக்கைக் கூட்டணி அரசின் தலைமை நியமித்ததைக் கண்டு இந்தக் கட்சியினரின் வருத்தமும் பொறுமலும் இன்னும் கூடிவிட்டதாகத் தெரிகிறது.

இதன் தொடர்பில் முதலில் வெடித்தவர் பிகேஆர் உதவித் தலைவர்களில் ஒருவரும் பெர்மாத்தாங் பாவ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான நூருல் இசாதான். தன் தந்தையின் கைகளையும் கண்களையும் கட்டி முரட்டுத்தனமாக தாக்கியதுடன், அவருக்கு சிகிச்சைகூட அளிக்க மனமில்லாத.. மனித நேயமற்ற ரஹிம் தாய்லாந்தில் நடுவராக செயல்பட பொருத்தமில்லாமில்லாதவர் என்று பளிச்சென தன் கருத்தை வெளிப்படுத்தினார் நூருல்.

அடுத்த இரண்டொரு தினங்களில் நூருலின் தாயாரும் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசாவும் தன் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். தீவிரவாத நடவடிக்கைகளைக் கையாள்வதில் ரஹிம் தேர்ந்தவராக இருக்கலாம்; தென் தாய்லாந்து அமைதி பேச்சு வார்த்தையில் நடுவராக ரகிமை மகாதீர் நியமித்தது அவரின் தனிப்பட்ட உரிமையாகவும் இருக்கலாம்; ஆனாலும் ரகிமை தான் மன்னிக்கத் தயாராக இல்லை என்று தெரிவித்துள்ள வான் அசிசா, நூருல் வெளிப்படுத்திய கருத்திற்கு பிரதமரிடம் விளக்கம் அளித்துள்ளதாகவும் ஒரு வானொலி நேர்காணலின்போது பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தன் எண்ணத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

ரகிம், அன்வாரைத் தாக்கியது ஒரு பொருட்டல்ல; தேசிய போலீஸ் படைத் தலைவராக இருந்த அவர், போலீஸ் காவலில் உள்ள எவரையும் தாக்கலாம். இருந்தாலும், மனிதநேயம் அற்ற வகையிலும் சட்டத்திற்குப் புறம்பாகவும் ஒருவரைத் தாக்கியதற்காக நீதிமன்றத்தால் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர் ரகிம்; அத்துடன் அதே நீதிமன்றத்தால் ஆயிரக் கணக்கான வெள்ளிக்கு தண்டமும் விதிக்கப்பட்டவர் ரஹிம். அதைவிட, ரஹிம் மனித நேயமற்றவர் என்று நீதிபதியால் சாடப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட நிலையில், இன்னொரு நாடு சம்பந்தப்பட்ட அமைதிப் பேச்சில் நடுவராக செயல்பட தார்மீக உரிமை தனக்கு உள்ளதா என்பதை ரகிமே எண்ணிப் பார்த்து, தன்னைத் தானே எடைபோட வேண்டிய நிலையில் இருக்கிறார்.

ரகிமால் தாக்கப்பட்டவர் அன்வார் என்பதால், அன்வாரின் மகளும் மனைவியும் ரகிமிற்கு எதிராக கருத்து தெரிவிக்கின்றனர் என்று கருதுவதற்கு இங்கு இடமில்லை. காரணம், நூருலும் வான் அசிசாவும் குடும்ப உறவைக் கடந்து நம்பிக்கைக் கூட்டணியிலும் அதன் கூட்டரசிலும் அங்கமாகவும் இருப்பவர்கள்.

இவர்களைத் தவிர, பிகேஆர் கட்சி சார்பில் இன்னொரு தலைவரான அப்துல்லா சானி அப்துல் ஹமிட்டும் ரகிம் நியமனத்தை மறுத்துள்ளார் என்பது இங்கே எண்ணிடத்தக்கது.

இவர்களைத் தவிர, நம்பிக்கைக் கூட்டணி அரசின் இன்னொரு தூணான ஜசெக-வின் மூத்தத் தலைவர் டாக்டர் பூ ச்செங் ஹாவும் ரகிம் நியமனத்தை சாடியுள்ளார். பூ, இன்னும் ஒரு படி மேலே சென்று, தண்டனை பெற்ற ஒரு கிரிமினல் குற்றவாளியான ஒருவர், இன்னொரு நாட்டின் அமைதி பேச்சுவார்த்தையில் மலேசியாவைப் பிரதிநிதிக்க பொருத்தமற்றவர் என்று கருத்து தெரிவித்துள்ளதுடன், மலேசிய அமைச்சரவை உறுப்பினர்களும் இந்த நியமனத்தை நிராகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் பூ முன் மொழிந்துள்ளார்.

நம்பிக்கைக் கூட்டணி கட்சிகளின் தலைவர்களிடையே கருத்திணக்க அடிப்படையில் எந்த முடிவும் எடுக்க வேண்டும் என்ற நிலைக்கு மாறாக, பிகேஆர் கட்சித் தொண்டர்களின் மனம் நெருடும்படியான நிலை தொடரும் வகையில் அடுத்தடுத்த நடவடிக்கைகள் அமைவதால், அக்கட்சித் தொண்டர்களிடையே ஏதோவொரு ஐய ரேகை நிலைகுத்தி நில்லாமல் மெல்ல படர்ந்து விரிகிறது.

பிகேஆர் கட்சியினர், எவரை மன்னித்தாலும் ரகிமை மன்னிக்கத் தயாராக இல்லை. காரணம், 1997, 98ஆம் ஆண்டுகளில் அன்வாரின் பேச்சை ஒட்டுக் கேட்டதும் இரகசியமாக பதிவு செய்து மேலிடத்திற்கு அனுப்பியதும் இவர்தான் என்று நம்புகின்றனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக, அஸ்மின் அலியின் ஆதரவாளர்களான டத்தோ சுரைடா கமாருடின், சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி ஆகியோர் பிகேஆர் தலைமைப் பதவி குறித்து மாற்றுக் கருத்து சொன்னபோது அவர்களை அஸ்மின் கண்டிக்காததும் அதற்கும் மேலாக, பிகேஆர் கட்சியைக் கடந்து அஸ்மினுக்கு ஆதரவாக இருக்கும் ஒரு வலுவான பின்புலம் குறித்தும் எண்ணிப் பார்க்கும் பிகேஆர் கட்சியினரின் ஐயமும் ஆதங்கமும் விரிந்து செல்கின்றன.

இவற்றை யெல்லாம் அறிந்தும் எதையும் வெளிப்படுத்தாமல்,  அளந்து அளந்து பேசுவதுடன், புதிய அரசியலில் எண்ணியெண்ணி நிதானமாக அடியெடுத்து வைக்கும் அன்வார், தன்னுடைய அரசியல்-வாழ்க்கைப் பயணத்தில் மிகவும் கனிந்துள்ளார்.. பக்குவப்பட்டுள்ளார் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

‘ஞாயிறு’ நக்கீரன்