ஜமாலுடின் ஜர்ஜிஸின் ரிம2.1பில்லியன் சொத்தில் பங்கு கேட்கிறார் அவரின் தாயார்
ஜஸ்மின்: ஜமாலுடின் ஜர்ஜிஸ் (ஜேஜே) டாக்டர் மகாதிர் முதல் முறை பிரதமராக இருந்த 22 ஆண்டுக்காலத்தில் படுவேகமாக உச்சிக்கு வந்த அரசியல்வாதிகளில் ஒருவர்.
தெனாகா நேசனல் பெர்ஹாட் தலைவராக அனி அரோப் என்ற ஒரு நேர்மையான மனிதர் இருந்தார். அவர் சர்ச்சைக்குரிய மின் உற்பத்தியாளர்களுடன் அரசாங்கம் ஒப்பந்தம் செய்துகொள்ளத் தடையாக இருந்தார் என்பதால் அவரை நீக்கிவிட்டு அவரின் இடத்தில் ஜேஜே-யை அமர்த்தினார் மகாதிர்.
அப்போது ஜேஜே இரண்டாம் நிலை நிதி அமைச்சர். அப்துல்லா அஹமட் பிரதமராகி நோர் அஹ்மட் யாக்கோப்பை அப்பதவிக்கு நியமனம் செய்யும்வரை ஜேஜே இரண்டாவது நிதி அமைச்சராகத்தான் இருந்தார் பின்னர் நஜிப் ரசாக் பிரதமரானபோது அவர் அமெரிக்கத் தூதராக நியமிக்கப்பட்டார்.
இப்படி, ஜேஜே பல பதவிகளில் இருந்துள்ளார். கேள்வி என்னவென்றால், இத்தனை பதவிகளில் இருந்து அவ்வளவு பெரிய சொத்தைச் சம்பாதிக்க முடியுமா என்பதுதான்.
பாக்சிக்: சொத்தெல்லாம் ஒரு போலீஸ் அதிகாரியான அவரின் தந்தை ஈட்டியதா அல்லது எல்லாமே அமைச்சரின் சம்பாதித்தியம்தானா? அமைச்சர்களின் மாதச் சம்பளம் ரிம20,000-க்குக் குறைவுதான். அப்படி இருக்க ஜமாலுடின் இவ்வளவு சொத்து சேர்த்தது எப்படி?
அடி சான்: முன்னாள் அமைச்சர்கள் ஒரு நடுத்தர வருமானத்தை வைத்துக்கொண்டு அளப்பரிய சொத்துச் சேர்த்தது எப்படி? முன்னாள் அமைச்சர்கள் செல்வச் செழிப்பில் மிதப்பதும் கோடீஸ்வரர்களாக திகழ்வதும் எப்படி என்பதை இப்போதைய அரசாங்கம் கண்டறியும் என எதிர்பார்ப்போம்.
சன்சைன்: கடந்த 20 , 30 ஆண்டுகளில் அம்னோ அரசியல்வாதிகள்/ அமைச்சர்கள் அந்த அரசியல்வாதிகளுடன் ஒட்டிக்கொண்டிருந்த தொழில் அதிபர்கள் ஆகியோர் சேர்த்து வைத்திருக்கும் சொத்துகள் தகாத வழியில் வந்தவை என்ற கருத்துத்தான் பரவலாக நிலவுகிறது.
ஜேஜேயும் அவரின் அம்னோ சகாக்களும் சாதாரண குடும்பப் பின்னணியைக் கொண்டவர்கள்தான். அவர்கள் பரம்பரை பணக்காரர்கள் அல்லர்.
அவர் மட்டுமல்ல, அரசுத்துறை தலைவர்கள், அரசாங்கச் சார்பு நிறுவன(ஜிஎல்சி) தலைவர்கள், அண்மையில் பணி ஓய்வுபெற்ற தேசிய போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) போன்றோரையும் விசாரிக்க வேண்டும்.
முறைதவறிய அரசியல்வாதிகள் அண்மைக்காலமாக நாட்டைச் சூறையாடி வந்திருக்கிறார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
இதற்கு 1எம்டிபி-யே நல்ல எடுத்துக்காட்டு.
தலைவெட்டி: பிஎன், குறிப்பாக அம்னோ மக்களிடமிருந்து இவ்வளவு கொள்ளையடித்ததா என்பதை நினைக்கவே மனம் பதைபதைக்கிறது. வளமாக இருக்க வேண்டிய நாடு சிலரின் கைங்கரியத்தால் வறிய நாடாகி விட்டதே.
வசதியானவர்கள், அதிகாரப் பீடத்துடன் நல்ல தொடர்புள்ளவர்கள் ஏழைகளிடம் கொள்ளையடிக்கிறார்கள். அமெரிக்கர்கள் சரியாகத்தான் சொன்னார்கள்- முன்னாள் நஜிப் அரசாங்கம் ஒரு கொள்ளைக்கார அரசாங்கம் என்று.
பெயரிலி 770241447347646: இந்தக் கணக்கு இப்படி என்றால் மற்ற அமைச்சர்கள், துணை அமைச்சர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு?
அவர்களின் மொத்த சொத்துக்களும் சரியான முறையில் மதிப்பிடப்பட்டால் மலேசியாவின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் அவர்களும் இடம்பெறுவார்கள்.
ஜேஜே இவ்வளவு சொத்துக்களைச் சேகரிக்க முடிந்தது எப்படி? சம்பளத்தில் ஒரு சென்னைக்கூட செலவு செய்யாமல் சேர்த்து வைத்திருந்தால்கூட இவ்வளவு பெரிய சொத்தைச் சேர்க்க முடியாதே.
பக்கத்தான் ஹரப்பான் அரசு முன்னாள் அமைச்சர்கள் ஒவ்வொருவரின் சொத்துக்களையும் ஆராய வேண்டும். சேர்த்து வைத்துள்ள சொத்துக்களுக்குச் சரியான விளக்கங்களைத் தராதவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
உள்ளூர் சொத்துக்களை மட்டுமல்ல, அவர்களின் குடும்ப உறுப்பினர் பெயர்களில் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களையும் ஆராய வேண்டும்.
அஸ்டோன் மார்டின்: அம்னோ தலைவர்கள் தொழிலில் கெட்டிக்காரர்கள் போலும். இல்லையென்றால் குறுகிய காலத்தில் பெரும் பணம் சம்பாதிக்க முடியுமா?
சமுதாயத்தை திருத்தி அமைக்கும் அரசாங்கத் திட்டத்தைவிட இவர்களின் திட்டம் பிரமாதமாக இருக்கும்போல் தெரிகிறதே.
பெர்ட் டான்: பிஎன் அமைச்சர்கள், தலைவர்கள்மீது பணச் சலவை- எதிர்ப்புச் சட்டம், பயங்கரவாத நிதியுதவி- எதிர்ப்புச் சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் பெறப்படும் ஆதாயங்களுக்கு எதிரான சட்டம் ஆகியவற்றைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுத்தால் நாட்டின் ஒரு டிரில்லியன் கடனைத் தீர்த்து விடலாம், பாதிக் கடனையாவது தீர்த்து விடலாம்.
பெயரிலி 2327531438397239: அம்னோவில் உண்டுக் கொளுத்துப்போனவர்களின் குறிக்கோள் ஒன்றே ஒன்றுதான் : மகனே உன் சமர்த்து முடிந்தவரை சுருட்டு. ஒருவரிடமே ரிம2.1 பில்லியன் என்றால்…….இன்னும் எத்தனை பேரிடம் எத்தனை கோடியோ?
நியாயவான்: மலாய்க்காரர்களே விழித்துக் கொள்ளுங்கள். உங்களுக்குச் சொந்தமான பணம் எங்கே போகிறது யார் திருடுகிறார்கள் என்பதை உணருங்கள்.. ஜேஜே அம்னோவின் ஒரு குட்டித் தலைவர்தான். அவரே ரிம2.1 பில்லியனுக்கு அதிபதியாக உள்ளார்.
எனில், இந்த 60 ஆண்டுக்காலத்தில் அம்னோ உயர்மட்டத் தலைவர்களும் தொகுதித் தலைவர்களும் எத்தனை கோடிகளைச் சுருட்டி இருப்பார்கள்.
எம்ஏசிசியும் ஐஆர்பி-யும் நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.
மக்களிடம் வயிற்றை இறுகக் கட்டிக்கொண்டிருக்கச் சொல்லாமல் அரசாங்கம் ஊழல் பணத்தைத் திரும்பப் பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும்.