‘அவர் ஏற்கனவே பணக்காரர்தான்’- ஜேஜேயைத் தற்காக்கிறார் நஜிப்

நஜிப் அப்துல் ரசாக், தாம் பிரதமராவதற்கு முன்பே காலஞ்சென்ற டாக்டர் ஜமாலுடின் ஜார்ஜிஸ் ஒரு வெற்றிகரமான தொழில் முனைவராகத் திகழ்ந்தவர் என்பதால் அவரின் பெரும் சொத்து குறித்து யாரும் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை என்று ஜமாலுடினைத் தற்காத்துப் பேசியுள்ளார்.

நேற்றிரவு முகநூல் பதிவிட்டிருந்த நஜிப், தம்முடன் நெறுக்கமாக இருந்துதான் ஜமாலுடின் சொத்துச் சேர்த்தார் என்று கூறப்படுவதை மறுத்தார்.

2015-இல் ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் கொல்லப்பட்ட ஜமாலுடின் நஜிப்பின் நெருங்கிய நண்பராக இருந்தவர். நஜிப் பிரதமராக இருந்தபோது பல அமைச்சுகளில் பணியாற்றியுள்ளார்.

ஜமாலுடின் 84-வயது தாயார் மகனின் சொத்தில் பங்கு கேட்டு வழக்கு தொடுத்தபோதுதான் அவருக்கு ரிம2.1பில்லியன் சொத்து இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.

அந்த விவரம் வெளிவந்ததை அடுத்து ஒரு அமைச்சரால் எப்படி இவ்வளவு சொத்துக்களைச் சேர்க்க முடிந்தது என்ற கேள்வியும் உடன் எழுந்தது.

“இறந்துபோன ஒருவரால் பதில் சொல்ல முடியாது என்ற நிலையில் அவரை நோக்கிக் குற்றச்சாட்டுகள் அள்ளிவீசப்படுவதைக் காண வருத்தமாக உள்ளது.

“நான் பிரதமராக இருந்தபோதே ஜமாலுடின் வெற்றிகரமான தொழிலதிபராக இருந்தார்.

“நல்ல நண்பர் என்றாலும் தமக்குக் குத்தகைகள் வேண்டுமென்று அவர் கேட்டதே இல்லை”, என்று நஜிப் கூறினார்.

மின் பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவரான ஜமாலுடின் 1986-இல் இபிபி பவர் என்ற நிறுவனத்தை வாங்கினார். பின்னர் அது கோலாலும்பூர் பங்குச் சந்தையிலும் பட்டியலிடப்பட்டது. அதன் மூலமாக அவருக்கு நல்ல வருமானம் வந்தது.

அந்த வருமானத்தை வேறு பல திட்டங்களில் முதலீடு செய்தார்.

டாக்டர் மகாதிர் முகம்மட் பிரதமராக இருந்த காலத்திலும் ஜமாலுடினுக்கு அரசாங்கத் திட்டங்கள் தனியார்மயத் திட்டங்கள் எனப் பல திட்டங்கள் கிடைத்தன.

“1990-களில் இபிஇ பவருக்கு சாபாவில் மின் உற்பத்தி செய்யும் திட்டங்கள் கொடுக்கப்பட்டன”, என்றவர் சொன்னார்.

தாம் பிரதமராக இருந்தபோது ஜமாலுடின் மலேசியத் தூதராக அமெரிக்கா சென்று விட்டதால் அவரின் பிள்ளைகள் தொழிலைக் கவனித்துக் கொண்டு மேலும் பல திட்டங்களில் “முதலீடு செய்தார்கள்” என்றார்.

“ஜமாலுடின் ஜார்ஜிஸ், நன்கு படித்தவர், தொழிலில் வெற்றிபெற்ற ஒரு மலாய் வணிகர். வருந்தத்தக்க சூழலில் அவர் இறந்து போனார். அவர்மீது அபாண்டமாகக் குற்றஞ்சாட்டுவது அழகல்ல”, என முன்னாள் பிரதமர் முகநூலில் குறிப்பிட்டார்.