பூமிகள் என்இஎம் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை- மகாதிர்

பூமிபுத்ராக்கள் அரசாங்கம் வழங்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறினால் அவர்கள் மற்றவர்களைவிட பின்தங்கியவர்களாகத்தான் இருக்க நேரும் என்பதை பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் நினைவுறுத்தினார்.

“நாங்கள் (அரசாங்கம்) முடிந்ததைச் செய்கிறோம் . ஆனால், விரைந்து ஆதாயம் காணும் கலாச்சாரம்தான் (மலாய்க்காரரிடையே) காணப்படுகிறது. இதுதான் அவர்களின் தோல்விக்குக் காரணமாகிறது.

“இதனால் பூமிபுத்ரா- அல்லாதவர்களே பயனடைகிறார்கள்”. மகாதிர் இன்று காலை நாடு மற்றும் பூமிபுத்ராக்களின் எதிர்காலம் மீதான தேசிய காங்கிரசைத் தொடக்கி வைத்து உரையாற்றினார்.

தொழில்துறையில் இறங்குவதற்குப் புதிய பொருளாதாரத் திட்டத்தின் வழி அரசாங்கம் வாய்ப்புகளை வழங்குகிறது. ஆனால், வாய்ப்பு கிடைக்கப்பெற்றவர்கள் தங்களுக்கு கார்கள் இறக்குமதி செய்வதற்கு உரிமம் கொடுக்கப்பட்டிருந்தால் விரைந்து ஆதாயம் காண்பதற்காக கொடுக்கப்பட்ட உரிமங்களை மற்றவர்களிடம் விற்று விடுகிறார்கள். குத்தகைகள் கொடுத்தால் உள்-ஒப்பந்தம் செய்துகொண்டு மற்றவர்களிடம் கொடுத்து விடுகிறார்கள்.

“நாம் தொழில் செய்ய விரும்புவதில்லை. அதனால் நமக்குக் கொடுக்கப்படும் வாய்ப்புகளை வைத்து மற்றவர்கள் தொழில் செய்கிறார்கள். வெற்றி அடைகிறார்கள்.

“அங்கே (பெரு நகரங்களில்) நாம் இல்லை. ஏனென்றால் கிடைத்த வாய்ப்புகளை விற்றுத் தொலைத்து விட்டோம்”, என்று மகாதிர் கூறினார்.