‘அம்னோவிற்கு அன்வார் இப்ராஹிம் தேவையில்லை’

அதிகாரத்தில் இல்லை எனும் ஒரே காரணத்திற்காக, அன்வார் இப்ராஹிம்மின் ஆதரவு கட்சிக்குத் தேவையில்லை என அனுவார் முசா கூறியுள்ளார்.

“அண்மையில் அன்வார் இப்ராஹிம் அம்னோவுடன் ஒத்துழைக்க மாட்டேன் எனக் கூறியுள்ளார். அன்வாருக்கு என் வாழ்த்துகள்.

“அம்னோவுக்கு அன்வார் தேவையில்லை,” என நேற்றிரவு, பேராக், பாசீர் சாலாக்கில் நடந்த மலாய் எழுச்சி மாநாட்டில் அனுவார் மூசா கூறியுள்ளார்.

துன் மகாதீருக்குப் பதிலாக பிரதமர் பதவியில் அமர்ந்தால், தனது பழைய கட்சியான அம்னோவுடன் ஒத்துழைப்பு வைத்துகொள்வார் என்ற குற்றச்சாட்டை அன்வார் மறுத்தார் என ‘பெரித்தா ஹரியான்’ வெளியிட்டிருந்த செய்தி குறித்து, அனுவார் முசா இவ்வாறு கருத்துரைத்தார்.

அன்வார் இப்ராஹிம், மகாதிர் போன்ற முன்னாள் தலைவர்கள் இல்லை என்றால், அம்னோ செத்துவிடாது என்றும் அவர் தனதுரையில் கூறியிருந்தார்.

“மகாதிரும் அன்வாரும் கட்சியிலிருந்து பிரிந்து சென்றாலும், அம்னோ இன்னும் பலமாகவே இருக்கிறது. அவர்கள் அம்னோவுக்குத் தேவையில்லை, ஆனால் அரசியல் உயிர்வாழ்விற்காக ஒரு காலத்தில் அவர்களுக்கு அம்னோ தேவைப்படலாம்,” என்றும் சுமார் 5,000 பேர் கூடியிருந்த அந்நிகழ்ச்சியில் அவர் சொன்னார்.

“இரண்டே ஆண்டுகளான பெர்சத்துவை நினைத்து மகாதிர் பெருமை கொள்ள முடியாது. பிகேஆரை நினைத்து அன்வார் பெருமைகொள்ள முடியாது, காரணம், அவர்களை உருவாக்கியது அம்னோ,” என்றார் அவர்.

மலாய்க்காரர்கள் பிளவுபட்டு இருக்கும் வரை சீர்திருத்தம் இல்லை

மேலும் பேசுகையில், மலாய்க்காரர்களின் ஒத்துழைப்பு இல்லாமல், ஹராப்பானின் எந்தவொரு சீர்திருத்த திட்டமும் வெற்றிபெறாது என்றார்.

“அரசாங்கத்தைக் கைப்பற்றும் போது சீர்திருத்தங்களை நடைமுறைபடுத்துவோம் என்று அன்வார் வாக்களிக்கிறார், பிகேஆர் துணைத் தலைவர், ரஃபிசி ரம்லி சீர்திருத்தங்களை மேம்படுத்துவோம் என்று வாக்குறுதியளித்தார்.

“அவர்களிடம் சொல்லுங்கள், மலாய்க்காரர்களுக்கிடையே ஒற்றுமை ஏற்படாத வரை சீர்திருத்தங்கள் ஏதுமில்லை என.

“மகாதிர் வரட்டும் அல்லது அன்வர் அல்லது வேறு எவரேனும் வரட்டும், நம் வாழ்வு பிளவுபட்டு இருக்கின்ற வரை, நம்மால் எதையும் (புதுப்பிக்க) செய்யமுடியாது,” என்று அவர் கூறினார்.