அமைச்சர் : பிரதமரின் கட்டளை, அதிகபட்சம் 10 அதிகாரிகளை மட்டுமே நியமிக்க முடியும்

ஒவ்வொரு அமைச்சிலும் 10 அதிகாரிகளுக்கு மேல் நியமிக்கக்கூடாது என்பது பிரதமர் துன் டாக்டர் மகாதிரின் கட்டளை என சுகாதார அமைச்சு உறுதிபடுத்தியது.

தாங்கள் பிரதமரின் அறிவுறுத்தலை ஏற்றுக்கொள்வதோடு, தற்போது இருக்கும் அதிகாரிகளை விவேகமாக பயன்படுத்த முனைந்துள்ளோம் என்று சுகாதார அமைச்சர், டாக்டர் ஜுல்கிஃப்ளி அஹ்மாட் தெரிவித்தார்.

“பிரதமரின் அறிவுறுத்தலை பின்பற்றுவதில் சிக்கல் இல்லை, முதலில் சில அமைச்சர்கள் அதிகமான அதிகாரிகள் தேவையென்று கூறியபோதும், இறுதியில் அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டனர்,” என்றார் அவர்.

உதாரணத்திற்கு, கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லி மாலேக், உயர்க்கல்வி அமைச்சு தற்போது கல்வி அமைச்சுடன் இணைக்கப்பட்டுவிட்டதால், அவ்வமைச்சுக்குக் கூடுதல் அதிகாரிகள் தேவையென முன்னதாக கேட்டதாகவும், ஆனால் இறுதியில் அனைத்து சிக்கல்களும் தீர்க்கப்பட்டன என்றும் அவர் கூறினார்.

நேற்று, அமைச்சரவை உறுப்பினர்கள் 10-க்கும் மேற்பட்ட உதவியாளர்களை அல்லது முந்தைய நிர்வாகத்தை போன்ற சிறப்பு அதிகாரிகளை நியமிக்க அனுமதிக்கப்படவில்லை என்று ஒரு செய்திப் பதிவு தெரிவித்துள்ளது.

முன்பு, ஓர் அமைச்சர் 35 அதிகாரிகள் வரை நியமிக்க முடியும், ஆனால் இப்போது ஓர் அமைச்சர் ஒரு பத்திரிகைச் செயலாளர் மற்றும் மூன்று சிறப்பு அதிகாரிகளை மட்டுமே நியமிக்க அனுமதிக்கப்படுவதாக அமைச்சக ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சகத்திற்குப் போதுமான பட்ஜெட் இல்லாத காரணத்தால், முன்னாள் அரசியல் நிர்வாக நியமன அதிகாரிகளுக்குத் தனியார் நிறுவனங்கள்தான் ஊதியம் வழங்கியுள்ளன.

அரசாங்க சேவை இலாகாவின் 2012 சுற்றறிக்கையின் படி, ஓர் அமைச்சர் ஒரு சிறப்பு அதிகாரி, ஓர் அந்தரங்கச் செயலாளர் மற்றும் ஒரு பத்திரிகைச் செயலாளரை மட்டுமே நியமிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.