மகாதிர் ஒரு ‘மாமாக்’ ‘பேய்’, லோக்மான் கூறுகிறார்

 

பேராக்கில் நேற்றிரவு நடந்த ஒரு மலாய் உரிமைகள் பேரணியில் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் லோக்மான் நூர் அடாம் மலாய்க்காரர்களும் இஸ்லாமும் அச்சுறுத்துலக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்ற அச்ச உணர்வைத் தூண்டும் வகையில் பேசியதோடு அவர் பிரதமர் மகாதிரை ஒரு “மாமாக்” என்றும் “பேய்” என்றும் கூவினார்.

பாசிர் சாலாக்கில் மலாய் எழுச்சி பேரணியில் பேசிய அவர், மலாய் ஆட்சியாளர்கள் மீதும் வழக்குத் தொடரும் அதிகாரம் கொண்ட சட்டத்துறை தலைவர் (ஏஜி) பதவிக்கு ஓர் இஸ்லாமியர் அல்லாதவரை நியமித்ததின் காரணம் என்ன என்று வினவினார்.

“டாக்டர் மகாதிர் முகமட் என்ற பெயர் கொண்ட அந்த மாமாக் மற்றும் பேய் உருவாக்கிய சிறப்பு நீதிமன்றத்தில் எந்த யாங் டி-பெர்துவா, எந்த சுல்தான் மற்றும் யாங் டி-பெர்துவான் அகோங் ஆகியோர் மீது வழக்குத் தொடரும் அதிகாரம் சட்டத்துறை தலைவருக்கு உண்டு.

“இயலுமானாலும் நாம் அமைதியாக உட்காந்து இருக்க முடியாது, நாம் எழுச்சி பெற்றாக வேண்டும், சரியா?, என்று அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கானோரிடம் அவர் கூறினார்.

சமீபத்தில் நடைபெற்ற சுங்கைக் கண்டீஸ் இடைத் தேர்தலில் பிஎன் வேட்பாளராகப் போட்டியிட்ட லோக்மான், கூட்டத்தினரை “மலாய்க்காரர்கள் நீடுழி வாழ்க” (Hidup Melayu), மற்றும் “டிஎபியை ஒழிப்போம்” (Destroy DAP) என்று முழங்கச் செய்தார்.

டோமி தோமஸ் சட்டத்துறை தலைவராக (ஏஜி) கடந்ந்த ஜூனில் நியமிக்கப்பட்டார்.

“ஒரு கம்யூனிச அனுதாபியை நாம் (பிஎன்) எப்போதாவது நியமித்ததுண்டா? கம்யூனிசத் தலைவர் சின் பெங்கிற்கு நெருக்கமானவரை நியமித்ததுண்டா? இல்லைவே இல்லை.

“நாம் எப்போதாவது, பிரிட்டீஷ் ஆட்சிக் காலத்திலிருந்து, ஒரு முஸ்லிம் அல்லாதவரை சட்டத்துறை தலைவராக நியமித்ததுண்டா?, என்று லோக்மான் வினவினார்.

தகவல் குறிப்பு: பிஎன்னுக்கு முந்தைய கூட்டணி (Allianace) அரசாங்கம் முஸ்லிம் அல்லாத சிசில் மஜெல்லா ஷெரிடன் என்பவரை 1959-லிருந்து 1963 வரையில் சட்டத்துறை தலைவராக நியமித்திருந்தது.

‘சிஜே இஸ்லாத்தை எதிர்க்கிறார்’

முதல் முறையாக கிழக்கு மலேசியர் ஒருவர் மலேசியா நீதிதுறையின் உச்சப் பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கும் ரிச்சர்ட் மலாஞ்சும் பற்றியும் லோக்மான் குறிப்பிட்டார்.

“அவர் இஸ்லாத்தை எதிர்க்கிறார் என்பதற்கான தெளிவான பதிவு இருக்கிறது … நான் ஏன் அவர் இஸ்லாத்தை எதிர்க்கிறார் என்று கூறுகிறேன்? மலேசியாவில், ஒரு முஸ்லிம் முஸ்லிம்-அல்லாத ஒருவரை திருமணம் செய்துகொள்ள விரும்பினால், முஸ்லிம்-அல்லாதவர் முஸ்லிமாக மாறியாக வேண்டும்.

“முஸ்லிமாகப் பிறந்த மரினா தியுவை, ஜாப்பார் தியு என்பவரின் மகளை, ரிச்சர்ட் மலாஞ்சும் திருமணம் செய்து கொண்ட போது, மலாஞ்சும் முஸ்லிமாக மாறவில்லை.

“மாறாக, மரினா தியு இஸ்லாத்திகிருந்து மாறுவதற்கு அனுமதிக்கப்பட்டார். இஸ்லாத்தில், முஸ்லிமான ஒருவர் இஸ்லாத்திலிருந்து மாற முடியாது”, என்றார் லோக்மான்.

மலேசியாகினி மரினா தியு பற்றி லோக்மான் கூறியதின் உண்மையினை தற்போது உறுதிசெய்ய இயலாமல் இருக்கிறது.

மலாஞ்சும் அளித்திருந்த நீதிமன்ற தீர்ப்புகள் பற்றியும், லீனா ஜோய் மற்றும் இந்திரா காந்தி சம்பந்தப்பட்ட சமயம் சார்ந்த வழக்குகள் உட்பட, குறிப்பிட்ட லோக்மான், அவர் இஸ்லாத்திற்கு எதிரானவர் என்று கூறிக்கொண்டார்.

இஸ்லாத்தின் நலன்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் நீதிபதிகளை தேர்வு செய்யும் பொறுப்பும் மலாஞ்சுமுக்கு இருக்கிறது என்று லோக்மான் மேலும் கூறினார்.

“நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீகள் என்று உணர்கிறீர்களா? அந்த வழக்குகள் உங்களுக்கு ஆதரவாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா? மலாய்க்காரர்கள் என்ற வகையில் நாம் கவலைப்படுவதற்கு காரணம் இருக்கிறது.

“நாம் பொங்கி எழுந்து ஆட்சேபிக்கவும் நமது உரிமைகளைக் கோரவும் நமக்கு உரிமைகள் இருக்கின்றன”, என்றார் லோக்மான்.

இந்தப் பேரணியை அம்னோ பாஸிர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் தஜுடின் அப்துல் ரஹ்மான் ஏற்பாடு செய்தார். அதை நேரடியாக முகநூலில் உத்துசான் மலேசியா வழங்கியது.

இந்த நிகழ்ச்சியில் சுமார் 10,000 மக்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.