சிலாங்கூர் முன்னாள் பெண் சட்டமன்ற உறுப்பினர் கைது

இன்று, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி), முன்னாள் சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை, ரிம 50,000 ஊழல் விசாரணை தொடர்பில் கைது செய்தது.

அந்த 56 வயது நிரம்பிய பெண் சட்டமன்ற உறுப்பினர், இன்று மாலை 5.50 மணியளவில், சிலாங்கூர் எம்ஏசிசி அலுவலகத்திற்கு விளக்கம் அளிக்க வந்தபோது கைது செய்யப்பட்டார்.

இதனை, சிலாங்கூர் மாநில எம்ஏசிசி இயக்குநர் அலியாஸ் சலிம் உறுதிபடுத்தினார்.

எம்ஏசிசி 2009 சட்டம், செக்‌ஷன் 23-ன் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அவர் கூறினார். நாளை, தடுப்புக் காவல் அனுமதி பெற ஷா ஆலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அப்பெண்மணி கொண்டுசெல்லப்படுவார்.

அந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மாநில சமூகச் சேவை மையத் திட்டத்திற்கு நியமனம் செய்த ஒரு நிறுவனம், அவரது மகனுக்குச் சொந்தமானது என்று நம்பப்படுவதாக ஆணையத்தின் ஆதாரங்கள் கூறுகின்றன.