தேர்தல் சீர்திருத்தக் குழுவை (இ.ஆர்.சி.) அரசியல் கட்சிகள் தங்கள் சுயநலத்திற்காக கட்டுப்படுத்தக்கூடாது, மாறாக அது சுதந்திரமாக, பாரபட்சமற்றதாகக் கருதப்பட வேண்டும் எனத் தேர்தல் சீர்திருத்த அமைப்பு, பெர்சே கூறியது.
அரசியல் கட்சி உறுப்பினர்கள் இ.ஆர்.சி. தலைமை பொறுப்பை ஏற்கக்கூடாது, பெர்சத்து துணைத் தலைவர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான் அப்பதவியை நிரப்ப சரியான மனிதர் அல்ல என்றும் பெர்சே தெரிவித்தது.
“இ.ஆர்.சி. சுதந்திரமாக, எந்தத் தரப்புக்கும் சாதகமாக இல்லாமல், எளிதாக அணுகக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும் எனும் பொது மக்களின் கருத்துக்கு எதிராக இது உள்ளது.
“இ.ஆர்.சி. தலைவர், அதன் செயலவை உறுப்பினர்களிடையேத் தேர்வு செய்ய வேண்டும், மாறாக அரசியல்வாதிகள் அதற்கு தலைமை தாங்கக்கூடாது என பெர்சே பரிந்துரைக்கிறது,” என இன்று ஓர் அறிக்கையில் அக்குழு தெரிவித்துள்ளது.
இ.ஆர்.சி. தனது செயற்குழுவை 18 பேர் கொண்டதாக விரிவாக்க எண்ணியுள்ளது, தற்போது 10 பேர் கொண்ட அக்குழுவில் பெர்சே, எதிர்க்கட்சியான பிஎன் உள்ளிட்ட பல குழுக்களை இணைக்க வேண்டுமென பெர்சே தெரிவித்தது.
இ.ஆர்.சி.-யில் இணையலாமா, வேண்டாமா எனத் தீர்மானிக்கும் முன்னர், தங்கள் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என பெர்சே கூறியுள்ளது.
இ.ஆர்.சி.-யில் பெர்சத்துவின் அங்கத்துவம் அதிகமாக உள்ளது எனவும் பெர்சே கூறியுள்ளது.
“செயலவையினர் 10 பேரில், கமாருடின் முகமட் நோர், நோர்டின் சாலே மற்றும் சைஃபுல் வான் ஜான் என மூவர் பெர்சத்து கட்சியைச் சேர்ந்தவர்கள்.
பெண் ஒருவர்கூட இல்லை
“ஆனால், பிகேஆர், டிஏபி, அமானா, பாஸ், காபூங்கான் பார்ட்டி சரவாக் மற்றும் கிழக்கு மலேசிய கட்சிகளில் இருந்து பிரதிநிதித்துவம் இல்லை. அதே நேரத்தில், பிஎன்-னுக்குக் குழுவில் ஓர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
“அதே சமயம், அந்தப் பத்து பேரில் ஒருவர்கூட பெண் இல்லை. தேர்தல் சீர்திருத்தத்திற்காக கட்சிகளின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவை விரைவு படுத்துவதற்காக இ.ஆர்.சி.-இல் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் கூட்டு பிரதிநிதித்துவம் இருக்க வேண்டுமெனவும் பெர்சே முன்மொழிகிறது,” என்று அக்குழு கூறியுள்ளது.