டாக்டர் எம்: எஸ்.எஸ்.தி.-க்கும் ஜி.எஸ்.தி.-க்கும் உண்மையில் அதிக வேறுபாடுகள் இல்லை

எஸ்.எஸ்.டி. மற்றும் ஜி.எஸ்.டி. இரண்டிலிருந்தும் அரசாங்கத்திற்குக் கிடைக்கும் வருவாயில் குறிப்பிடத்தக்க வேறுபாடு ஏதும் இல்லை எனப் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமத் தெரிவித்தார்.

ஜிஎஸ்டி திருப்பிச் செலுத்தும் நிதியிலிருந்து, அரசாங்கத்திற்கு அதிக வருவாய் கிடைக்கும் என்று ஒரு மாயை ஏற்படுத்தப்பட்டுவிட்டது என அவர் தெரிவித்தார்.

“ஜிஎஸ்டி வருமானம், முன்னாள் அரசாங்கத்தால் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கையைப் போல் அல்ல, அவர்கள் 40 பில்லியன் ரிங்கிட்டை ஜி.எஸ்.டி. வழி சேகரிக்கலாம் என்று கூறினர். ஆனால், நாம் இரண்டு முறை வரி வசூலிக்க முடியாது என்பதால், சில பணத்தை வரி செலுத்துவோருக்குத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று எண்ணுகிறோம்.

“எனவே, ஜிஎஸ்டி-க்கும் எஸ்.எஸ்.டி.-க்கும் எண்ணிக்கையில் அதிக வித்தியாசம் இல்லை. எனவே, நாம் எஸ்.எஸ்.டி.-ஐ நடைமுறைபடுத்தினால் போதும், ஏனெனில் ஜிஎஸ்டி மக்களுக்கு மனச்சோர்வை ஏற்படுத்திவிட்டது,” என்று அவர் இன்று ஆர்டிஎம் 1 வெளியிட்ட ஒரு பேட்டியில் கூறினார்.