மஇகா-வின் தற்போதைய நிலை, ஓர் இருண்ட அத்தியாயம்!

மக்கள் நீதிக் கட்சி தன் பெயரை மாற்றிக் கொள்ளுமா என்று கேட்டிருக்கும் மஇகா தலைமை, அதற்கு முன் தனது பெயரை மாற்றிக் கொள்வதைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

மஇகா-வை விட மக்கள் நீதிக் கட்சியில்(பிகேஆர்) இந்தியர்கள் அதிகமாக உறுப்பியம் பெற்றுள்ளனர் என்று பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் சொன்ன கருத்தை மஇகா-வின் புதிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் அப்படியே ஏற்றுக் கொண்டதுடன், அன்வாரிடம் ஒரு கோரிக்கையையும் முன் வைத்துள்ளார். பிகேஆர் கட்சியின் பெயரையும் இந்திய சமுதாயத்தின் பெயரில் மாற்றி வைத்துக் கொள்ளும்படி அன்வாரிடம்  கேட்டுள்ளார் விக்னேஸ்வரன்.

பிகேஆர் கட்சியில் உறுப்பியம் பெற்றிருக்கும் இந்தியர் எண்ணிக்கை, மஇகா-வினும் கூடுதலாக இருக்கலாம்; இருந்தாலும், பிகேஆர் கட்சியில் உள்ள மலாயர்களின் எண்ணிக்கையைவிட நிச்சயமாக குறைவாகத்தான் இருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக, தற்பொழுதே அந்தக் கட்சியின் பெயர் இனம்-மொழி-உள்ளிட்ட கூறுகளைக் கடந்த நிலையில், ‘மக்கள் நீதிக் கட்சி’ என பொதுவாகத்தான் இருக்கிறது. அதேவேளை, பிகேஆரைவிட குறைவான இந்தியர்களைக் கொண்டிருக்கும் மஇகா-விற்கு அந்தப் பெயர் இனியும் பொருத்தமானதா என்பதை விக்னேஸ்வரன் எண்ணிப் பார்க்க வேண்டும்.

கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் புது டில்லி முதல் இலண்டன் வரை பிரதிபலித்த மலேசிய இந்தியர் காங்கிரஸ் பேரியக்கத்திற்கு நெடிய அரசியல் பின்னணியும் வரலாறும் உண்டு; ஜவஹர்லால் நேரு, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், வின்ஸ்டன் சர்ச்சில் ஆகியோரின் பெயரைத் தவிர்த்துவிட்டால், மஇகா-வின் தொடக்க கால வரலாறு முழுமைப் பெறாது. அப்படிப்பட்ட மஇகா-வின் தற்போதைய நிலை, ஓர் இருண்ட அத்தியாயம் என்றே சொல்லலாம்.

பத்தாவது தலைவராக  விக்னேஸ்வரன் இப்போது தலைமை ஏற்றிருப்பது குறித்து, சமுதாயத்தில் ஓரளவிற்குகூட பிரதிபலிக்கவில்லை. நிகழும் 21-ஆம் நூற்றாண்டு தொடங்கியதில் இருந்தே ம.இ.கா. ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் முன்பிருந்த மக்கள் எழுச்சி தென்படுவதில்லை.

மாறாக, எந்தத் தலைவர்.., எந்த இடத்தில்.., எதன் தொடர்பில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்கிறார் என்பதைப் பொறுத்து சம்பந்தப்பட்டவரின் ஆதரவாளர்களும் அவரின் மூலம் அணுகூலத்தை எதிர்பார்ப்பவர்கள் மட்டும் கூடுவது வழக்கமாக இருந்தது.

இப்பொழுது அதுவும் இல்லை; மஇகா செயலற்றுக் கிடக்கிறது என்பதற்கு அதன் அண்மைய மத்திய செயலவைக் கூட்டங்களே முழு சாட்சி.

சமுதாய மறுமலர்ச்சிக்கு பேரளவில் வித்திடா விட்டாலும், அதிகார நாற்காலியில் அறுபது தொற்றிக் கொண்டிருந்ததால், தேசிய முன்னணிஅரசு, குறிப்பாக தேசிய முன்னணி அரசு அளித்த பெருநிதியை மானியம் என்ற பெயரில் பங்கு போடவும் பதவி சண்டைக்காகவும் என மஇகா தேசிய தலைமையகக் கட்டடத்தில் கூட்டம் காணப்படும்.

இப்போது, அதுவும் இல்லை.

சான்றாக, ஜோகூர் மாநில அரசாங்கத்தின் சார்பில் 2018-ஆம் ஆண்டிற்காக அளிக்கப்பட்ட மில்லியன் கணக்கான மானிய நிதியில் பெரும்பகுதியை, பொதுத் தேர்தலுக்கு முன்பாகவே ம.இ.கா. தனக்குத் தானே பரிவர்த்தனை செய்து கொண்டு விட்டது என்று ஜோகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் இராமகிருஷ்ணன் குறிப்பிட்டிருப்பது, அதன் தரத்தை காட்டுகிறது.

மஇகா-வைப் பொறுத்தமட்டில், பதவியும் மானிய வசதியும் இருக்கும்வரை ஒட்டிக் கொள்வோம்; அது இல்லாவிடில் வெட்டிக் கொள்வோம் என்ற அளவில் அது மாற்றம் கண்டுள்ளது.

மஇகா தலைவர்களின் சமுதாய நோக்கு!

இப்படிப்பட்ட மஇகா-வைவிட அதிகமான இந்தியர்கள் மக்கள் நீதிக் கட்சியில் இருக்கிறார்கள் என்பதை  ஒத்துக் கொண்டிருக்கும் அதன் தேசிய தலைமை, மலேசிய இந்தியர் காங்கிரஸ் என்னும் பெயரைத் தாங்கி இருக்க அந்தக் கட்சிக்கு இனியும் தார்மீக உரிமை இல்லை; எனவே, மஇகா கட்சியானது தன் பெயரை முதலில் மாற்றிக் கொள்ள வேண்டும். அதன், பிறகு அந்த யோசனையை பிகேஆருக்கு சொல்ல வேண்டும்.

இருப்பினும், 1946 இல் துவங்கப்பட்ட மஇகா ஓர் உணர்வு பூர்வ நிலையில் மலேசிய இந்தியர்களின் உரிமை சார்ந்த நிலையில் ஊடுருவி உள்ளது. அதன் அரசியல் ஈடுப்பாடு இன அரசியல் வழிமுறையில் அத்தியவசியமாகிறது.

நாட்டில் எல்லாப் பகுதிகளிலும் சாமானிய இந்தியர்களின் ஒரே இன அரசியல் கட்சியாக மஇகா இருந்துவந்துள்ளது. அது மீண்டும் தலைத்தோங்க வேண்டுமென்றால் அதற்கு புதிய சிந்தனையும் போராட்ட உணர்வும் மாறுபட்ட சமூக சீரமைப்புக்கான விழிப்புணர்ச்சியை அது கொண்டிருக்க வேண்டும். இந்தப் பாதைக்கு மஇகா திருப்புமா?

  • ‘ஞாயிறு’ நக்கீரன்.