நிதி மைச்சர் லிம் குவான் எங் மீதான ஊழல் வழக்குக் கைவிடப்பட்டது ஏன் என்று விளக்கம் கேட்போர் கூட்டத்தில் சைட் சாதிக் அப்துல் ரஹ்மானும் சேர்ந்து கொண்டிருக்கிறார்.
இளைஞர், விளையாட்டு அமைச்சர் “எல்ஜிஇ(லிம்) மீதான வழக்கு ஏன் கைவிடப்பட்டது என்று ஏஜிசி பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்”, என இன்று டிவிட் செய்திருந்தார்.
“என்னைப் பொறுத்தவரை எம்ஏசிசி-க்கு வழக்கு தொடுக்கும் அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் சட்டத்துறைத் தலைவர் அதிகாரம் குறைக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் தொடர்ந்து குரல் கொடுப்பேன்”, என்றாரவர்.
நேற்று பெர்மாத்தாங் பாவ் எம்பி நூருல் இஸ்ஸா அன்வாரும் இதே போன்ற கோரிக்கையை டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
“சட்டத்துறைத் துறைத் தலைவர் அலுவலகம் முன்வந்து விளக்கமளிக்க வேண்டும்” என்றவர் கேட்டுக்கொண்டிருந்தார்.
நூருலுக்குப் பதிலளித்த பிரதமர்துறை அமைச்சர் முகம்மட் ஹனிபா மைடின், லிம் விடுவிக்கப்பட்டது ஏன் என்று ஏஜி விளக்கமளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார். சட்டத்தில் அதற்கு இடமில்லை.
மேலும், எம்ஏசிசிக்கு வழக்கு தொடுக்கும் அதிகாரம் கொடுப்பதிலும் அவருக்கு உடன்பாடில்லை. அந்த ஆணையத்தின் பொறுப்பு போலீசைப் போல் புலன் விசாரணை செய்வது மட்டுமே என்றாரவர். அதற்கு வழக்கு தொடுக்கும் அதிகாரம் கொடுப்பது நடைமுறைக்கு முரணானது என்றார்.