திரங்கானு மாநிலத்தின் ஷரியா சட்டங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் அல்லது அவற்றை மாற்றும் நிலையில் பெடரல் அரசாங்கம் இல்லை, ஏனென்றால் அவை மாநில ஆளுமைக்கு உட்பட்டவை என்று பிகேஆரின் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் அன்வார் இப்ராகிம் கூறினார்.
கடந்த திங்கள்கிழமை, ஓர் இனச் சேர்க்கையில் ஈடுபட்ட இரு பெண்களுக்கு பொதுமக்கள்முன் பிரம்படி கொடுக்க திரங்கானு ஷரியா நீதிமன்றம் உத்தரவிட்டது பற்றி கருத்துரைத்த அன்வார், அத்தண்டனையைப் பெரும்பாலான மலேசியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை ஏனென்றால் அது முறையான சட்ட நடவடிக்கையை பின்பற்றாமல் செய்யப்பட்டதோடு அதில் புரிந்துணர்வும் பரிவும் இல்லை என்றாரவர்.
இஸ்லாமியக் கட்சி ஆட்சியில் திரங்கானுவில் நடந்தது முற்றிலும் மாநில சட்டங்களுக்கு உட்பட்டது. அவற்றின் மீது செல்வாக்கைப் பயன்படுத்தும் அல்லது மாற்றங்கள் செய்யும் நிலையில் பெடரல் அரசாங்கம் இல்லை என்று அவர் தெரிவித்தார்.
இது ஏனென்றால் இஸ்லாமியச் சட்டம் மாநில நீதிபரிபாலனத்திற்கு உட்பட்டது என்று அன்வார் இன்று பிலிப்பைன்ஸ், மகாடி நகரில் கூறினார்.
பொதுமக்கள்முன் பிரம்படி கொடுக்கப்பட்டது பற்றியும் அவர் பிரதமரானால் சிவில் மற்றும் ஷரியா சட்டங்களைச் சமநிலைப்படுத்துவதற்கு என்ன செய்வார் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு அன்வார் பதில் அளித்தார்.