அமைச்சர் : பல்கலைக்கழகம் , பல்கலைக்கழகக் கல்லூரி சட்டத்தின் ஒரு பகுதியை அகற்ற அரசாங்கம் ஆய்வு செய்கிறது

நாடாளுமன்றம் l பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரிகள் (AUKU) சட்டம் 1971, பிரிவு 15 மற்றும் 16 ஆகியவற்றை அகற்றுவதற்கான வாய்ப்புகளை அரசாங்கம் ஆராய்கிறது. இச்சட்டங்கள் வளாகத்தில் அரசியல் சுதந்திரத்தை தடுக்கிறது என்று கூறப்படுகிறது.

கல்வி அமைச்சர், மஸ்லி மாலேக் இதனை இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பக்காத்தான் ஹராப்பான் நிர்வாகத்தின் இந்நடவடிக்கை, பல்கலைக்கழகங்களில் கல்வியியல் தன்னாட்சி மற்றும் அரசியல் சுதந்திரத்தை நிலைநிறுத்தும் நோக்கம் கொண்டது என்றும் அவர் சொன்னார்.

“தூர நோக்குத் திட்டத்தில் இச்சட்டம் முழுமையாக அகற்றப்பட்டு, புதிய சட்டம் அமலாக்கத்திற்கு வரும்.

“குறுகிய கால திட்டமாக, அச்சட்டத்தின் 15 மற்றும் 16-வது பிரிவுகள், மாணவர்களுக்குச் சுதந்திரம் வழங்க வழிசெய்யும் வகையில், மதிப்பாய்வு செய்யப்படும் அல்லது அகற்றப்படும்,” என்று அவர் கூறினார்.

இச்சட்டத்தின் பிரிவு 15, மாணவர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்கிறது மற்றும் பல்கலைக்கழகத்திலிருந்து அவர்களை இடைநீக்கம் செய்யவும் அனுமதிக்கிறது.

இதற்கிடையில், பிரிவு 16 பல்கலைக்கழகத் துணைத் தலைவரின் பிரதிநிதி, பல்கலைக்கழக வளாகத்தில், இயக்கங்கள் அல்லது மாணவர்களின் எந்தவொரு அமைப்பையும் இடைநிறுத்தம் அல்லது கலைக்க உதவுகிறது.

கல்வி அமைச்சு 100 நாள்களில் மேற்கொண்ட முயற்சியில், பொது பல்கலைக் கழகங்களில் ‘பேச்சு மேடை’-ஐ மீண்டும் நடைமுறைபடுத்த பரிந்துரைத்ததும் அடங்கும் என மஸ்லி கூறினார்.

“பயம், கட்டுப்பாடு, அச்சுறுத்தல் இல்லாமல், பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் தங்கள் கருத்துகளை முன்வைக்க, அரசியலில் ஈடுபட நாங்கள் ஊக்குவிக்கின்றோம், ஆனால், அவர்கள் கல்வியைப் புறக்கணிக்கக் கூடாது என்ற நிபந்தனையோடு,” என்று அவர் கூறினார்.