தன்னைச் சீனராக அல்லாமல் ஒரு மலேசியராகவே கருதுவதாக டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறியதை மசீச தலைவர் லியோ தியோங் லாய் சாடினார்.
“நான் சீனன் அல்ல, மலேசியன் என்று லிம் கூறியதைக் கேட்டு வருந்துகிறேன். மிகவும் வருந்துகிறேன்.
“லிம்முக்கும் டிஏபிக்கும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் -நாம் சீனர்கள். அத்துடன் மலேசியர்களுமாவோம்.
“இதை அவருக்குத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்”, என நேற்றிரவு பலாக்கோங் இடைத் தேர்தலில் மசீச வேட்பாளர் டான் சீ தியோங்குக்காக பரப்புரை செய்தபோது லியோ கூறினார்.
மே 12-இல் , 44 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக சீனர் ஒருவர் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டதன் தொடர்பில் செய்தியாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்தபோது லிம், தன்னை ஒரு சீனராக அல்லாமல் மலேசியனாகவே கருதுவதாகக் கூறினார்.
சீனர்களின் உரிமைகளை விற்று துரோகம் இழைக்க வேண்டாம் என லியோ லிம்மை எச்சரித்தார்.
மலேசியாவைப் பல இனங்கள் வாழும், பன்மொழிகள் பேசப்படும் நாடாக வைத்திருக்கவும் பல்வகைமை ஏற்றுக்கொள்ளப்பட்ட நாடாகவும் வைத்திருக்க மசீச கடுமையாக பாடுபட்டு வந்துள்ளது என லியோ கூறினார்.