கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் மலேசிய அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழக(ஐஐஅயுஎம்)த் தலைவராக நியமிக்கப்பட்டதை அடுத்து அம்னோ தலைவர் ஒருவர் அரசியலையும் பல்கலைக்கழகங்களையும் தனித்ததனியே வைத்திருக்கும் அரசாங்கத்தின் கொள்கை என்னவானது என்று வினவினார்.
மஸ்லீ ஐஐயுஎம் தலைவர் பதவியை ஏற்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ரீஸால் மரைக்கான் நயினா மரைக்கான் கேட்டுக்கொண்டார்.
“அந்த நியமனம் பல்கலைக்கழகங்கள் அரசியல் தலையீடின்றி சுதந்திரமாக செயல்படும் என்ற அவரது வாக்குறுதிக்கு முரணாக உள்ளதுபோல் தோன்றுகிறது”, என அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ஓர் அறிக்கையில் கூறினார்.
கல்வி அமைச்சர் என்ற முறையில் மஸ்லீக்கு நிறைய பொறுப்புகள் இருக்கும் என்று ரீஸால் சுட்டிக்காட்டினார்.
“(ஐஐயுஎம்) தலைவர் என்பது சடங்குப் பூர்வமான பதவிதான் என்றாலும் அதற்காகவே நேரத்தையும் கவனத்தையும் செலவிடக்கூடிய தகுதியான ஒருவர் அப்பதவியை வகிப்பதே நல்லது”, என்றாரவர்.