நேற்றிரவு பலாக்கோங் இடைத் தேர்தல் பரப்புரையில் மசீச வேட்பாளர் டான் சீ தியோங்கிற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் தாக்கியுடின் ஹசான் ஒரு மசீச நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரலாறு படைத்தார்.
மலேசியாவை ஒரு சமயம் சார்ந்த ஆட்சியுடைய நாடாக மாற்றும் பாஸின் இலட்சியத்தை மசீச நீண்டகாலமாக எதிர்த்து வந்துள்ளது. ஆயினும் இன்று இது நடந்துள்ளது.
தாமான் துன் பேராக்கில் மசீச மேடையில் தோன்றிய தாக்கியுடின் சமநிலைப் படுத்துவதின் தேவையைப் பற்றி பேசினார்.
நாட்டில் அரசியல் சுனாமி ஏற்பட்டது. அது அரசாங்க மாற்றத்தை பெடரல் அளவிலிருந்து மாநில அளவு வரையில் கொண்டு வந்தது. நாம் அதை பிஎன்னிலிருந்து பக்கத்தான் ஹரப்பானுக்கு கொண்டு வந்தோம்..
ஹரப்பான் நல்ல அரசாங்கமாக இருக்கும், நம்பக்கூடியதாகவும் நம்பிக்கையைக் கொண்டுவரக்கூடியதாகவும் இருக்கும் என்று பலர் எண்ணினார்கள். ஆனால், அது உண்மையில் நம்பிக்கை இல்லாதது என்பதோடு மக்களின் நம்பிகையையும் அழிக்கிறது என்று சுமார் 20 பேர் அடங்கிய கூட்டத்தில் தாக்கியுடின் கூறினார்.
மசீசவால் ஊக்குவிக்கப்படும் ‘சமநிலைப்படுத்தும்’ கருத்தை அவர் வலியுறுத்தினார். மேலும், மசீச வேட்பாளர் டானை ஆதரிக்கும்படி பாஸ் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளவர்களை மட்டுமல்லாது அனைத்து பலாக்கோங் மக்களையும் அவர் கேட்டுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தாக்கியுடின், பலாக்கோங் இடைத் தேர்தலில் பாஸ் தலைவர் ஹாடி அவாங் பெரிதும் ஆதரிக்கும் எதிரணியின் ஒற்றுமை அடிப்படையில் மசீசவின் வேட்பாளரை பாஸ் ஆதரிக்கிறது என்று அவர் கூறினார்.
இன்றிரவிலிருந்து நாங்கள் பலாக்கோங்கில் இருப்போம். நாங்கள் மசீசவை தொடர்ந்து செல்வோம். மசீசவுக்கு ஒரு நிகழ்ச்சி இருந்தால் நாங்கள் கலந்துகொள்வோம் என்று தாக்கியுடின் மேலும் கூறினார்.
ஆரோக்கியமான தொடக்கம்
பாஸின் கொள்கை, குறிப்பாக ஹூடுட் சட்ட அமலாக்கம் ஆகியவற்றுக்கு மசீசவின் எதிர்ப்பு பற்றி குறிப்பிட்ட தாக்கியுடின், அது ஒரு பிரச்சனை அல்ல என்றார்.
முஸ்லிம் அல்லாதவர்கள் ஹூடுட்டை தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். பாஸ் அதன் நிலைப்பாட்டிற்குத் தொடர்ந்து விளக்கம் அளிக்கும் என்றாரவர்.
“இது ஒரு முஸ்லிம்கள் (விவகாரம்). முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இதில் செய்வதற்கு ஒன்றுமில்லை”, என்றார் தாக்கியுடின்.
மசீச பற்றி பாஸ் உறுப்பினர்களுக்கு அவநம்பிக்கை உணர்சி எதுவும் இருக்குமா என்ற கேள்விக்கு முழு நம்பிக்கையுடன் பதில் அளித்த தாக்கியுடின், பாஸ் உறுப்பினர்கள் எதிரணியை ஆதரிக்க ஹாடி விடுத்துள்ள உத்தரவைப் பின்பற்றுவார்கள் என்றார்.
14 ஆவது பொதுத் தேர்தலில், பாஸ் பலாக்கோங்கில் பிஎன்னைவிட அதிகமான வாக்குகளைப் பெற்றதை நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.
மே 9 தேர்தலில், பலாக்கோங்கில் பாஸ் இரண்டாவது இடத்தையும் மசீச் கடைசி இடத்தையும் பிடித்ததோடு அவற்றின் வைப்புத் தொகையையும் இழந்தன.
நாட்டிற்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் பாஸ் நாடாளுமன்றத்தில் மசீச, மஇகா மற்றும் அம்னோ ஆகிவற்றுடன் இணைந்து செயல்படுகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
பாஸ் ஒரு நிரந்தர செயல்முறை உறவை மசீச மற்றும் மஇகா ஆகியவற்றுடன் உருவாக்குமா என்ற கேள்விக்கு பதில் அளித்த தாக்கியுடின், “இன்றிரவு ஒரு ஆரோக்கியமான தொடக்கம்” என்றார்.
கடந்த காலத்தில் பாஸ் கட்சியை வன்மையாகக் கண்டித்து வந்த மசீச தலைவர் லியு தியோங் லாய் மற்றும் செனட்டர் டி லியன் கெர் ஆகியோர் தாக்கியுடினுடன் பேசிக் கொண்டிருக்கக் காணப்பட்டனர்.
அழையா விருந்தாளி?
பின்னர் சந்தித்த போது, இந்த நிகழ்ச்சியில் தாக்கியுனுடின் அழைக்கப்படாமல் கலந்து கொண்டார் என்று மசீச துணைத் தலைவர் வீ கா சியோங் கூறினார்.