அறிக்கைகள் வெளியீடு மற்றும் கொள்கை அறிவிப்புகளில் அதிக கவனமாக இருக்க வேண்டும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பாதிக்கும் வகையில் அவை இல்லாமல் இருப்பதை உறுதி செய்யும்படியும் புத்ராஜெயாவை மலேசிய – சீன வர்த்தக சம்மேளனம் (எம்சிசிசி) கேட்டுக்கொண்டுள்ளது.
பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட்டின் சீனா பயணத்திற்குப் பின்னர், மலேசியாவிற்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று, எம்சிசிசி இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.
“இருப்பினும், புதிய அரசாங்கத் தலைவர்களின் தெளிவின்மையற்ற, சீரற்ற கொள்கை அறிக்கைகள், தற்போதைய முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பாதிக்கும் வகையில் அமைந்துவிடுகிறது … இது நாட்டின் பொருளாதாரம் மீது தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்,” என்று எம்சிசிசி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எனவே, அனைத்து இன வணிகக் குழுவினர் மற்றும் தனியார் வணிகக் குழுக்களையும் உள்ளடக்கிய எம்சிசிசி-க்கு, இது தொடர்பாகத் தங்கள் கருத்துக்களையும் நிலைப்பாட்டையும் தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக, எம்சிசிசி மேலும் கூறியுள்ளது.
குவாந்தானில் அமைந்துள்ள மலேசியா-சீனா தொழிற்சாலை பூங்காவைச் சுற்றி எழுப்பப்பட்ட சுவர் இடிப்பது தொடர்பில், அது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்பதைக் காட்டுகிறது எனவும் எம்சிசிசி கூறியுள்ளது.
சூழ்நிலையைச் சாந்தமாக்கி, நற்பெயரைக் காப்பாற்ற வேண்டும்
“அந்த மதில் சுவர், தொழிலாளர்களையும் தொழிற்சாலை சொத்துக்களையும் பாதுகாக்க கட்டப்பட்டது. ஆக, அது மிகவும் நியாயமான ஒன்று.
“தேவையற்ற சம்பவங்களைத் தடுக்க, தவறான (பொய்யான) அறிக்கைகள் குறித்து, அதிகாரப்பூர்வமான நிறுவனங்கள் ஒரு விளக்கம் தருவது சிறந்தது என எம்சிசிசி நம்புகிறது, மேலும் இது தொழிற்துறை சுறுசுறுப்பாக செயல்படவும் வழிவகுக்கும்,” என்று அது மேலும் கூறியுள்ளது.
மகாதிரின், வெளிநாட்டவர்களிடம் சொத்துக்களை விற்பனை செய்வதற்கான தடை மீதான அறிக்கை குறித்தும் எம்சிசிசி கருத்து தெரிவித்துள்ளது. இது முதலீட்டாளர்கள் மற்றும் மேம்பாட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளதாக அது சொன்னது.