குவான் எங் விடுவிப்பு, மலேசியன் வழக்குரைஞர் மன்றம் அதிர்ச்சியடையவில்லை

 

ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து நிதி அமைச்சர் லிம் குவான் எங் விடுவிக்கப்பட்டது தமக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை என்று மலேசிய வழக்குரைஞர் மன்றத்தின் தலைவர் ஜோர்ஜ் வர்கிஸ் இன்று கூறினார்.

இன்று அவர் வெளியிட்ட ஓர் அறிக்கையில் சட்டத்துறை தலைவரின் அலுவலகம் தற்காப்பு வழக்குரைஞர்கள் சமர்பிக்கும் வேண்டுகோள்களுக்கு இணங்கிப் போவது வழக்கமான ஒன்று என்றும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான குற்றச்சாட்டை கைவிடுவது அரசு தரப்பு வழக்குரைஞரைப் பொறுத்தது என்றும் கூறுகிறார்.

ஒரு வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படுவதற்குமுன், வழக்கு விசாரணையின் எந்தக் கட்டத்திலும் வழக்கை மேற்கொண்டு தொடராமல் நிறுத்தும் முழு உரிமை அரசு தரப்பு வழக்குரைஞருக்கு குற்றவியல் நடைமுறை சட்டத் தொகுப்பு செக்சன் 254-இன் கீழ் அளிக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களின் சார்பில் அவர்களுடைய வழக்குரைஞர்கள் தங்களுடைய கட்சிக்காரர்களுக்கு எதிரான வழக்கைத் திரும்பப்பெற வேண்டும் அல்லது சாட்டப்பட்டுள்ள குற்றத்தைக் குறைக்க வேண்டும் என்று சட்டத்துறை அலுவலகத்திடம் வேண்டுகோள் விடுப்பது வழக்கத்திற்கு மாறான ஒன்றல்ல என்றும் வர்கீஸ் கூறுகிறார்.

முறையான அடிப்படையில் சட்டத்துறை அலுவலகம் இந்த வேண்டுகோள்களுக்கு சம்மதம் அளிப்பதுண்டு என்பதையும் வர்கிஸ் சுட்டிக் காட்டினார்.

சட்டத்துறை தலைவர் அலுவலகத்தின் மேல்முறையீடு மற்றும் வழக்கு விசாரணைப் பிரிவின் தலைவர் முகமட் ஹனாபியா ஸக்காரியா இந்த வழக்கில் அரசு வெற்றி பெற லிம்முக்கு எதிராகப் போதுமான ஆதாரம் இல்லை என்று கூறியிருந்ததையும் வர்கிஸ் சுட்டிக் காட்டினார்.

ஆகவே, டிபிபி ஹனாபியா குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டதில், மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) கூறிக்கொண்டபடி, “அதிர்ச்சி” ஏதும் இல்லை என்றார் வர்கிஸ்.