மூவாரில் சீனமொழி விளம்பரங்களை ‘வலுக்கட்டாயமாக அகற்றுவதா?’ சைட் சாதிக் எதிர்ப்பு

மூவார் எம்பி சைட் சாதிக், அம்மாவட்டத்தில் காலங்காலமாக சில்லறை வணிகர்கள் பயன்படுத்திவரும் சீனமொழி விளம்பரங்களை “வலுக்கட்டாயமாக அகற்ற” ஊராட்சி மன்றம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

கடைகளின் தூண்களில் விளம்பரத்துக்காக பயன்படுத்தப்பட்டுள்ள சீனமொழி எழுத்துகள் மலாய் மொழி எழுத்துகளைவிட பெரியவையாக உள்ளதால் அவற்றை அழித்துவிடுமாறு கடைக்காரர்களுக்கு மூவார் முனிசிபல் மன்றம் உத்தரவிட்டிருப்பதாக வெளிவந்த செய்தியை அடுத்து சைட் சாதிக் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

“மெண்டெரின் மொழி விளம்பரத்தை அகற்றுவதை நான் எதிர்க்கிறேன்.

“மூவாரின் அழகே அதன் பல்வகைமைதான். அதை நாம் பாதுகாக்க வேண்டும்.

“மெண்டெரின் விளம்பரங்கள் மூவாரின் வாழும் வரலாறு, அரை நூற்றாண்டுக்குமேலாக அவை இருந்து வருகின்றன”, என இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சருமான சைட் சாதிக் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

இவ்விவகாரம் தொடர்பில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டான் ஹொங் பின் இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.