எம்.டி.யு.சி. : அரசாங்கம் ஏழைத் தொழிலாளர்களுக்குத் துரோகம் செய்துவிட்டது

மலேசியத் தொழிற்சங்க காங்கிரஸ் (எம்.டி.யு.சி) பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் குறைந்த வருமானம் பெறும் குழுவினர் அல்லது B40 குழுவில் உள்ளவர்களுக்குத் துரோகம் செய்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில், 14 மில்லியன் தொழிலாளர்களை ஹராப்பானுக்கு ஆதரவாக வாக்களிக்கும் படி வலியுறுத்திய அதன் தலைமைச் செயலாளர் ஜே. சோலமன், தற்போது அக்கூட்டணி தொழிலாளர்களை அலட்சியப்படுத்திவிட்டதாக கூறினார்.

“புதிய அரசாங்கம் அமைந்துவிட்ட போதிலும் B40 மக்களின் அடிப்படை மனித உரிமைகள், வெளிப்படையாக மீறப்பட்டுள்ளது,” என்று அவர் ஓர் ஊடக அறிக்கையில் கடுமையாக சாடியுள்ளார்.

2019 ஜனவரி 1 முதல், குறைந்தபட்ச சம்பளம் மாதத்திற்கு RM1,050 அல்லது, ஒரு மணி நேரத்திற்கு RM5.05-ஆக தரப்படுத்தப்படுவதாக நேற்று புத்ராஜெயா வெளியிட்ட அறிவிப்பு குறித்து சோலமன் இவ்வாறு கருத்துரைத்தார்.

“RM1,000-லிருந்து RM50 அதிகரிப்பு, உழைக்கும் வர்க்கத்தினருக்கு ஒரு சிறிய தொகையாகும், சபா மற்றும் சரவாக்கிற்கான RM130 அதிகரிப்பு என்பது சபாவில் வறுமைக் கோட்டிற்கு (RM1,180) கீழே உள்ளது.

“முதல் திருத்தத்தில் 18 மாதகால இடைநிறுத்தம் மற்றும் 24 மாதங்களுக்குச் சமமான இரண்டாம் திருத்தத்தில் மற்றொரு ஆறு மாதகால இடைநிறுத்தம் ஆகியவைக்குப் பின்னர், இந்தக் குறைந்தபட்ச சம்பள அதிகரிப்பானது ஏழை தொழிலாளர்கள் புறக்கணிக்கப்படுவதைக் காட்டுகின்றது,” என்று அவர் கூறினார்.

தங்களின் தலைவிதியைப் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில்தான், கடந்தப் பொதுத் தேர்தலில் தொழிலாளர் வர்க்கம் அவர்களுக்கு வாக்களித்தது என்றும் அவர் சொன்னார்.

குறைந்த சம்பளம் மற்றும் உயர்ந்த வாழ்க்கை செலவினங்கள் ஆகியவற்றுடன் தொழிலாளர்கள் வசதியுடன் வாழமுடியாது என்றும் அவர் கூறினார்.

பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) இரத்து செய்யப்பட்டு, விற்பனை, சேவை வரி (எஸ்.எஸ்.டி) அமலாக்கம் கண்டுள்ளதால், விலையேற்றம் கண்ட பொருட்களில்  எந்த மாற்றமும் ஏற்படவில்லை. எனவே, B40 குழுவினரின் சுமைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன என்று மேலும் அவர் தெரிவித்தார்.

“எம்.டி.யு.சி.-ஐப் பொறுத்தவரை, ஹராப்பான் அரசாங்கம் ஏழை தொழிலாளர்களை ஏமாற்றிவிட்டது. அதுமட்டுமின்றி, திமிர்தனத்தைக் காட்டிய, தொழிலாளர்களைப் புறக்கணித்த முன்னாள் அரசாங்கத்தின் சாயலை, இப்பொழுது புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளிலும் வெளிப்படையாகக் காணமுடிகிறது.

“தொழிலாளர்களை அவமதிப்பதும் தொழிலாளர்களைப் புறக்கணிப்பதும் அரசாங்கத்தின் முட்டாள்தனம் என்பதை எம்.டி.யு.சி. புதிய அரசாங்கத்திற்கு நினைவுறுத்த விரும்புகிறது.

“தொழிலாளர்கள் கௌரவத்தைப் பாதிப்புக்குள்ளாக்கும் எவரையும், தொழிலாளர்கள் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.