கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு, நேற்று அறிவிக்கப்பட்ட RM1,050 குறைந்தபட்ச சம்பளத்தைத் துன் டாக்டர் மகாதீர் முகமட்டின் நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டுமென வலியுறுத்தினார்.
குறைந்தபட்ச சம்பளத்தில் RM50 அதிகரிப்பு, “15 மில்லியன் மலேசியப் பணியாளர்களை அவமதிக்கும்” ஒன்று, மேலும், அது ஹராப்பான் கூட்டணி கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு முரண்பாடாக உள்ளதால், ஹராப்பானின் செயல் நேர்மையற்றது எனவும் அந்த டிஏபி நாடாளுமன்ற உறுப்பினர் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.
குறைந்தபட்ச சம்பள மதிப்பாய்வு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்யப்படும் என்பதால், அடுத்த திருத்தமானது 2020 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் நடக்கும்.
“இந்த ஆண்டு RM50 அதிகரிப்பால், எங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் உறுதிகொடுத்தது போல, அடுத்த 5 ஆண்டுகளில் அரசாங்கம் குறைந்தபட்ச சம்பளத்தை RM1,500-க்கு உயர்த்துவது சாத்தியமற்றது.”
பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் RM1,050-க்கான காரணத்தை மக்களுக்கு விளக்க வேண்டுமென சார்லஸ் கூறினார்.
ஏனெனில், தேசிய ஊதிய ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டுதான், இந்த முடிவு எடுக்கப்பட்டது எனப் பிரதமர் அலுவலகத்தின் அறிக்கைகள் கூறியுள்ளன.
“ஊதிய ஆலோசனைக் குழு RM1,250 பரிந்துரைத்தது, எனவே அக்குழுவினரின் அறிக்கை மற்றும் RM1,500 குறைந்தபட்ச சம்பளத்தைச் செயல்படுத்துவதினால் ஏற்படும் விளைவுகளை வெளியிடுமாறு நான் அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன்.
“குறைந்தபட்ச சம்பளத்தை அதிகரித்தால், நிறுவனங்கள் மூடப்படலாம், இது வேலையின்மைக்கு வழிவகுக்கும் எனும் வாதம் பிரபலமாக இருப்பதால், அதற்கான ஆதாரங்களை வழங்கவும், குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவும் அரசாங்கத்தை நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் சொன்னார்.
RM50, ‘சிறிய’ அதிகரிப்பைப் பார்க்கும்போது, அடிப்படை பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை உயர்வை அரசாங்கம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை எனத் தெரிகிறது என்றும் அவர் கூறினார்.
மலேசியாவின் தொழிலாளர் வருமானம் உலகிலேயே மிகக் குறைவானவற்றுள் ஒன்று எனவும் அவர் நினைவுபடுத்தினார்.
ஆகையால், RM1,500 குறைந்தபட்ச சம்பளம், 40% தொழிலாளர்கள் வருவாயை அதிகரித்து, 2020-ஆம் ஆண்டளவில் மலேசியா உயர் வருமானம் பெறும் நாடுகளின் பட்டியலில் இடம்பெற வாய்ப்பளிக்கும்.”
அதுமட்டுமின்றி, புதிய ஊதியக் கட்டமைப்பு தொழிலாளர் வர்க்கத்திற்கு ஆதரவாக இல்லாவிட்டால், குறைந்த ஊதியம் பெறும் குடும்பங்கள் இன்னும் அதிக சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிவரும்.
“ஆகையால், கடந்த பொதுத் தேர்தலில் ஹராப்பானுக்கு மிகப் பெரிய ஆதரவாக அமைத்த தொழிலாளர்களின் நல்வாழ்வை மேம்படுத்தவும், ஊக்குவிக்கவும், பாதுகாக்கவும் குறைந்தபட்ச சம்பளத்தை டாக்டர் மகாதிர் உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்,” என்று சார்லஸ் சந்தியாகு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.