மலேசிய சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (யூ.ஐ.ஏ.எம்.) தலைவராக டாக்டர் மஸ்லி மாலிக் நியமிக்கப்பட்டது, கல்வியாளர் சமூகத்திற்கும் நாட்டின் கல்வி சுதந்திரத்திற்கும் அவமதிப்பான ஒன்று என மலேசிய சோசலிசக் கட்சியின் (பிஎஸ்எம்) இளைஞர் பிரிவு கூறியுள்ளது.
டாக்டர் மஸ்லி இஸ்லாமியத் துறையில் முதுகலை பட்டமும் நிர்வாகத் தத்துவத்துறையில் முனைவர் பட்டம் மட்டுமே வைத்திருக்கிறார் என்று அதன் துணைத் தலைவர் சரண்ராஜ் கூறியுள்ளார்.
“கல்வித் துறையின் பேராசிரியர் தரவரிசையில் டாக்டர் மஸ்லி இல்லை. கல்வியாளர்கள் மத்தியில் பேராசிரியர் தரவரிசையில் அங்கீகாரம் பெற்ற ஒருவரே, பல்கலைக்கழகத்தின் தலைவர் பதவிக்குத் தகுதியுடையவர்,” என்று அவர் ஓர் ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.
ஓர் அமைச்சரவை உறுப்பினர் எனும் பதவி இல்லாமல் இருந்திருந்தால், டாக்டர் மஸ்லியை அப்பல்கலைக்கழகத்தின் தலைவராக ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்கள் என்பதைப் பொதுமக்கள் அறிந்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
“மலேசியாவில், பல்கலைக்கழக நிர்வாகத்தை வழிநடத்த, பல்வேறு துறைகளில் நூற்றுக்கணக்கான ஆராய்ச்சிகளை நடத்திய, ஆயிரக்கணக்கான கல்விமான்கள் உள்ளனர்.
“டாக்டர் மஸ்லியின் நியமனம், தேசியக் கல்வியாளர்களுக்கு ஓர் அவமானம் மட்டுமல்ல, ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகள் தங்கள் தனிப்பட்ட அரசியல் செயல்திட்டத்தினால் நாட்டின் கல்வித்துறையை இன்னமும் மாசுபடுத்தி வருவதையே இது காட்டுகிறது,” என்றார் அவர்.
நேற்று, பிரதமர் துன் டாக்டர் மகாதிர் அந்நியமனத்தினால் அரசாங்கத்திற்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளார்.
மஸ்லியின் நியமனத்தைப் பொறுத்தவரை – அதில் தன்னார்வ முரண்பாடுகள் இருந்தபோதிலும் – அதனைக் கண்காணிக்கும் வாய்ப்புள்ளது எனப் பிரதமர் கூறியுள்ளார்.
அன்வார் இப்ராஹிம் மற்றும் நஜிப் ரசாக் இருவரும் கல்வி அமைச்சராக இருந்தபோது அப்பல்கலைக்கழகத்தின் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று யூ.ஐ.ஏ.எம். மாணவர் விவகாரங்கள் துறையின் முன்னாள் துணைவர், பேராசிரியர் டாக்டர் மிஸான் ஹீத்தாம் கூறியுள்ளார்.
பல புத்திசாலி மலேசியர்கள் வெளிநாட்டில் குடியேற ஆர்வமாக இருப்பதற்கு, தகுதி உடையவர்களை அங்கீகரிப்பதில் அரசாங்கம் கண்ட தோல்வியே காரணம் என்று சரண்ராஜ் தெரிவித்தார்.
“மேலும், டாக்டர் மஸ்லியின் நியமனத்தை ஏற்றுக்கொண்ட டாக்டர் மகாதிர், அரசியல் சாம்ராஜ்யத்திற்கு வெளியே, நிர்வாக நிலைகளை வழிநடத்துவதில் அரசியல்வாதிகளை நியமனம் செய்யும் நடவடிக்கைக்கு மக்களையும் இணங்க வைக்க வலியுறுத்தி வருகிறார்.
“பக்காத்தான் ஹராப்பான் வெறுமனே பிஎன்னுக்குப் பதிலாக, உறுப்பினர்களை மட்டுமே மாற்றம் செய்துள்ளது, ஆனால் மக்களின் ஆசைகளை நிறைவேற்ற முந்தைய அரசாங்கத்தைப் போலவே இதுவும் மறுக்கிறது.
“ஆக, மலேசியாவில் இதுபோன்ற பல முரண்பாடுகளைப் பக்காத்தான் ஹராப்பான் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பது மக்களுக்கு இன்னமும் எதிர்ப்பார்ப்பாகவே உள்ளது,” என்று அவர் கூறினார்.