அமைச்சரவை செயல்திறன் : ‘நான் ஒருபோதும் திருப்தியடைந்தது இல்லை’, பிரதமர்

புதிய அரசாங்கத்தில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் அமைச்சரவையின் செயல்திறன் மற்றும் அடைவுநிலையில் தனக்கு திருப்தி ஏற்படவில்லை எனப் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் கூறியுள்ளார்.

‘நான் ஒருபோதும் திருப்தியடைந்தது இல்லை. முடிந்தால், நான் விரும்புவதை (கட்டளையிட்டதை) நேற்றே செய்து முடித்திருக்க வேண்டும், இன்று அல்ல,” என இன்று பெட்டாலிங் ஜெயாவில், பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களுடனான கூட்டத்திற்குத் தலைமையேற்ற பின்னர், அதன் தலைவருமான மகாதிர் சொன்னார்.

ஒரு பிரச்சனைக்குத் தீர்வு கொடுக்காமல், அதனை வெவ்வேறு இலாகாக்களுக்கு மாற்றிவிட்டு, தாமதப்படுத்தும் அரசாங்க அதிகாரிகளையும் டாக்டர் மகாதிர் சாடினார்.

உதாரணத்திற்கு, கடந்த நான்கு மாதங்களாக, அமைச்சர்களுக்கான அதிகாரிகளை அதிகாரப்பூர்வமாக நியமனம் செய்யாமல், அவர்களுக்குச் சம்பளம் கொடுப்பதில் தாமதம் ஏற்படுத்துவதை அவர் சுட்டிக்காட்டினார்.

“ஒருசில காரணங்களால், நம்மால் தேர்தல் வாக்குறுதிகளை 100 நாள்களில் நிறைவேற்ற முடியவில்லை. எடுக்கப்பட்ட தீர்மானங்களைச் செயல்படுத்த முடியாத அளவுக்கு, அரசாங்கத்தின் சேதம் மிக மோசமாக உள்ளது.

“இன்னும் சில அதிகாரிகள் முந்தைய அரசாங்கத்திற்கு, நஜிப்பிற்கு விசுவாசமாக உள்ளனர். அமைச்சர்களுக்குத் தங்கள் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் உள்ளது.

“நான் அவர்களின் நியமனத்தை அங்கீகரித்த போதிலும், அவர்களுக்கு இன்னும் சம்பளம் வழங்கப்படவில்லை, காரணம் அந்த நியமனத்தில் ஏதோ தவறு இருக்கிறதாம்.

“அமைச்சரவை நடவடிக்கை எடுக்க முடிவுசெய்த போதுதான், சம்பளம் கொடுக்கப்பட்டது.

பல தரப்பினரின் விமர்சனத்திற்கு ஆளான, மலேசிய சர்வதேச பல்கலைக்கழகத்தின் தலைவராக டாக்டர் மஸ்லி நியமிக்கப்பட்டது தொடர்பில் கருத்துரைத்த மகாதிர், “அம்முடிவு கல்லில் செதுக்கப்பட்டது அல்ல,” என்றார்.

இன்றைய கூட்டத்தில், டாக்டர் மகாதீர் பல விஷயங்களை விவாதித்தார். அரசாங்கத்தின் மீதான மக்களின் திருப்தி நிலை, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சரவாக் மாநிலத் தேர்தல் உட்பட பல விஷயங்கள் பேசப்பட்டன.

-பெர்னாமா