இந்திய சமூகத்திற்காக, முந்தைய அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட RM8 மில்லியன், 14-வது பொதுத் தேர்தல் பணிக்காகப் பயன்படுத்தப்பட்டுவிட்டது என்ற குற்றச்சாட்டை ஜொகூர் ம.இ.கா. மறுத்துள்ளது.
ஜொகூர் மாநில நுகர்வோர், மனித வளம் மற்றும் ஒற்றுமைத் துறை தலைவரான டாக்டர் எஸ். இராமகிருஷ்ணனின் அக்குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என மாநில ம.இ.கா. தலைவர் அசோஜன் கூறியுள்ளார்.
2015-ம் ஆண்டில் அத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, ம.இ.கா. எந்தவொரு நிதியையும் பெறவில்லை என்றார் அவர்.
“அந்த ஒதுக்கீடுகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டன, ம.இ.கா. கணக்குகளில் அது சேமிக்கப்படவில்லை,” என்று அவர் குறிப்பிட்டார். 2017-ஆம் ஆண்டில், அத்திட்டக் குழுவிற்குத் தலைமை தாங்க, மாநில அரசாங்கத்தால் தான் நியமிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதுவரை 10,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள், இத்திட்டத்தினால் பயனடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த ஆண்டும் தேசிய முன்னணி அரசாங்கம் RM8 மில்லியனை அத்திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்தது, ஆனால் நிதி பகிர்ந்தளிக்கப்படவில்லை என்று அசோஜன் கூறினார்.
இத்திட்டத்தின் கீழ், RM2.5 மில்லியன் தொழில் முனைவோர் தொடர்பான நடவடிக்கைகளுக்கும், மக்கள் நலனுக்காக RM2 மில்லியனும், RM2 மில்லியன் கல்விக்காகவும் மற்றும் RM1.5 மில்லியன் தமிழ்ப்பள்ளிகளில் பழுதுபார்க்கும் பணிகளுக்காகவும் ஒதுக்கப்பட்டது என்றார் அவர்.
“நாங்கள் பொதுவாக ஜூன் மாதம் முதல் நிதிகளைப் பகிர்ந்தளிப்போம்.
“கடந்த மே மாதத்தில் அரசாங்கம் மாறியதால், ஒரே ஒரு சென் கூட வழங்கப்படவில்லை,” என்று கூறிய அவர், அந்தப் பணம் இன்னும் அரசாங்கத்திடம்தான் இருக்கிறது என்று மேலும் சொன்னார்.
எல்லாவற்றிற்கும் ம.இ.கா.-ஐக் குறை சொல்லாதீர்கள்
டாக்டர் இராமகிருஷ்ணன் மிகவும் பொறுப்பாக இருக்க வேண்டும், எல்லாவற்றிற்கும் ம.இ.கா.-வைக் குறை சொல்லக்கூடாது என்றார் அவர்.
“அவர் முதலில் உண்மைகளை ஆராய வேண்டும். நாங்கள் அவரது குற்றச்சாட்டுகளைக் கடுமையாகக் கருதுகிறோம். அவர் தனது குற்றச்சாட்டுக்காக ஒரு வாரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையேல் நாங்கள் சட்ட நடவடிக்கை எடுப்போம்,” என்று அசோஜன் கூறினார்.
மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள ஒரே இந்தியப் பிரதிநிதி எனும் வகையில், டாக்டர் இராமகிருஷ்ணன், இந்தியச் சமுதாயத்திற்காக அதிகம் செய்ய, பல்வேறு திட்டங்களுக்காக அதிக ஒதுக்கீடுகளைப் பெற முயற்சிக்க வேண்டும்.
தேசிய முன்னணி அரசாங்கத்தின் கீழ், ஆண்டுதோறும் RM11 மில்லியனுக்கும் மேல், பல்வேறு திட்டங்களுக்காக இந்திய சமூகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.
“கவுன்சிலர்களை நியமனம் செய்வதில்கூட அவர்களுக்குப் பிரச்சினைகள் உள்ளன. இதுவரை எட்டு இந்தியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர்,” என அவர் மேலும் கூறினார். இதற்கு முன்னர், மஇகா மற்றும் பிபிபி ஆகிய கட்சிகளில் இருந்து மொத்தம் 35 இந்திய கவுன்சிலர்கள் மாநில அளவில் இருந்தனர் என்றார்.
முன்னதாக, இந்தியர்களின் பல்வேறு சமூகத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட RM8 மில்லியன், இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில், ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுவிட்டது தொடர்பில் டாக்டர் இராமகிருஷ்ணன் ஏமாற்றம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
பாரிசான் நேசனல் அரசாங்கத்தால் அந்தப் பணம் செலவழிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
பத்திரிகை மாநாட்டில், ஜொகூர் மாநில மஇகாவின் முக்கியத் தலைவர்களுடன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.வித்யாநந்தனும் இருந்தார்.
மன்னிப்பு கேட்க முடியாது
இதற்கிடையில், டாக்டர் இராமகிருஷ்ணனைத் தொடர்பு கொண்டபோது, ம.இ.கா. அந்நிதி தொடர்பில் தன்னிடம் விளக்கமளிக்கவில்லை, அந்நிதியைத் தன்னிடம் கொடுக்கவும் இல்லை, எனவே தான் மன்னிப்பு கேட்கப்போவதில்லை எனக் கூறினார்.
“அந்த அறநிறுவனம் நிதியைப் பகிர்ந்தளிப்பதே இப்போது செயலற்றுக் கிடக்கிறது,” என்ற அவர், ஆரம்பத்தில் அப்படி ஒரு நிதிநிறுவனம் இருப்பதே தனக்குத் தெரியாது என்றார்.
“இந்திய சமூகத்திற்கு உதவ, மஇகா உட்பட, எவருடனும் இணைந்து பணியாற்ற நான் தயாராக இருக்கிறேன்,” என்றும் பெக்கோ சட்டமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.