அன்வார் இப்ராஹிம் மீண்டும் நாடாளுமன்றத்தில் நுழைய வழிவகுக்கும் வகையில், கடந்த பொதுத் தேர்தலில், பிகேஆர் வெற்றி பெற்ற நாடாளுமன்றத் தொகுதி ஒன்று அடுத்த வாரம் காலி செய்யப்படும்.
பிகேஆர் துணைத் தலைவர் ரஃபிசி ரம்லி இத்தகவலை அறிவித்ததோடு, மிக விரைவில் முன்னாள் துணைப் பிரதமர் நாடாளுமன்றம் திரும்புவார் எனவும், நேற்றிரவு கோத்தா பாருவில் நடைபெற்ற #ரிஃபோர்மாசி20தாஹுன் (20 ஆண்டுகால சீர்திருத்தம்) எனும் நிகழ்ச்சியில் பேசியபோது கூறினார்.
அன்வார் நாடாளுமன்றத்திற்குத் திரும்புவதை விரும்பாத கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பொறுட்படுத்தவில்லை, ஏனெனில் இன்னும் நிறைய பேர் தயாராக இருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
“பிகேஆர் மகளிர் தலைவர் ஷுரைடா காமருடின் மற்றும் துணைத் தலைவர் அஸ்மின் அலி போன்ற தலைவர்கள் வழி கொடுக்க மறுப்பது, ஒரு பிரச்சினையாக இருக்காது. காரணம், இன்னும் நிறைய பேர் தயாராக இருக்கிறார்கள்,” என்று முன்னாள் பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஃபிசி கூறினார்.
பிகேஆர் செயற்பட்டியலில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய இரண்டு நலன்கள் கட்சிக்கு உண்டு. கட்சியின் தலைவராக, நாடாளுமன்ற உறுப்பினராக அன்வாரைக் கொண்டுவந்து, நாட்டின் எட்டாவது பிரதமராக அவரை உருவாக்க வேண்டும் என்றார் ரஃபிசி.
“நாங்கள் அன்வாருடன் கலந்து பேசிவிட்டோம். கட்சிக்கு வெளியேயும் உள்ளேயும் இருக்கும் நபர்களைச் சுலபமாக எண்ண வேண்டாம், அவர்கள் வாய்ப்பளிக்க மாட்டார்கள் என்று அவரிடம் கூறியுள்ளோம். கட்சியின் பொதுத் தலைவராக மட்டும் இருப்பது போதாது.
“இம்முறை ஆட்டத்தை நாங்கள் ஏற்பாடு செய்கிறோம், அன்வார் கட்சியின் தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்,” என அவர் கூறினார்.