பரப்புரை காலம்: இசி மறுமதிப்பீடு செய்யும்

தேர்தல் ஆணையம்(இசி) தேர்தல் பரப்புரைகளுக்கு 21 நாள்கள் ஒதுக்குவது பொருத்தமானதுதானா என்பதை மறுபரிசீலனை செய்யவிருப்பதாக ஆணையத்தின் செயலாளர் முகம்மட் இலியாஸ் அபு பக்கார் கூறினார

இன்று நடைபெறும் பலாக்கொங் மற்றும் ஸ்ரீசித்தியா இடைத் தேர்தல்களில் முன் எப்போதும் இல்லாத அளவுக்குப் பரப்புரைக்கு மிக நீண்ட காலம், 21 நாள்கள், கொடுக்கப்பட்டதற்குப் பல்வகை பின்னூட்டங்கள் கிடைத்திருப்பதாக அவர் சொன்னார்.

“சுங்கை காடீஸ் இடைத் தேர்தலுக்கு 14 நாள்கள் கொடுத்தோம். இப்போது இவ்விரு இடைத் தேர்தல்களுக்கும் 21 நாள்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பரப்புரைக்கு எத்தனை நாள் கொடுப்பது பொருத்தமாக இருக்கும் என்பதை மறுமதிப்பீடு செய்வோம்”, என்றாரவர். முகம்மட் இலியாஸ், இன்று காலை பலாக்கொங் இடைத் தேர்தல் வாக்களிப்பு மையங்களில் ஒன்றான பலாக்கொங் எஸ்ஜேகே(சி)-க்கு வருகை புரிந்தார்.

ஜூலை 20-இல் சாலை விபத்து ஒன்றில் எட்டி இங் சை காலமானதால் பலாக்கொங்கில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இத் தேர்தல் பக்கத்தான் ஹரப்பானின் வொங் சியு கி-க்கும் மசீசவின் டான் சீ தியோங்குக்குமிடையிலான நேரடிப் போட்டியாக அமைந்துள்ளது.