கல்வி அமைச்சில் போராட்டம் நடத்திய மாணவ ஆர்வளர்கள் கைது செய்யப்பட்டதற்கு, பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது பேச்சு உரிமையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை என்று அவர்கள் விவரித்தனர்.
மலேசிய சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத் (யூ.ஐ.ஏ.எம்.) தலைவராக, கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் நியமிக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து, புத்ராஜெயாவில் கல்வி அமைச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று காலை தொடக்கம் அம்மாணவர்கள் குந்தியிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று அதிகாலை, அம்மாணவர்களில் அஷிக் அலி சேட்டி அலிவி மற்றும் சித்தி நுரிஷா டஷாலி ஆகிய இருவரை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் இருவரும் பின்னர் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
வெளியுறவு அமைச்சர் சைஃபுட்டின் அப்துல்லா மற்றும் பிரதமர் துறையின் துணையமைச்சர் ஹனீபா மைடின் இருவரும், அம்மாணவர்கள் உரிமையைக் கட்டுப்படுத்தும் வகையில் அவர்களைக் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
“எதிர்ப்பு தெரிவித்த மாணவர்களைக் கைது செய்ததை நான் ஏற்றுக்கொள்ளவில்லை, எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான அவர்களின் உரிமையை நான் ஆதரிக்கிறேன்,” என்று சைஃபுட்டின் தனது டுவிட்டர் வழி கூறியுள்ளார்.
தற்போதுதான் தனக்கு அச்செய்தி தெரியவந்தது என்றும், பெடரல் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, அது அவர்களின் உரிமை என்றும் ஹனீபா தெரிவித்துள்ளார்.
“புதிய மலேசியா, எதிர்ப்பு தெரிவிக்கும், அமைதியான முறையில் ஒன்றுகூடும், போராட்டம் நடத்தும் எந்தவொரு தரப்பினரின் ஜனநாயக உரிமைகளையும் சகித்துக்கொள்ள வேண்டும்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இதற்கிடையில், அவ்வாறு செய்யக்கூடாது என்று அதிகாரிகளிடம் தெரிவித்த போதிலும், அவர்கள் ஏன் கைது செய்யப்பட்டனர் என்பதை ஆராய்ந்து வருவதாக கல்வி அமைச்சர் மஸ்லி கூறியுள்ளார்.
“நான் இந்த வழக்கை விசாரிப்பேன், அனைத்து மாணவர்களும் நல்ல நிலையில் உள்ளனர், அவர்களுக்கு நியாயமான உரிமைகள் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் டுவிட்டரில் கூறினார்.
இருப்பினும், பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருக்கும் என்பதால், எந்தவொரு ஆட்சேபனை கூட்டத்தையும் கட்டடப் பகுதியில் நடத்த வேண்டாமென அவர் கேட்டுக் கொண்டார்.